அந்தியூரில் கோயில் நிலத்தில் அரசுக் கல்லூரி கட்டுவதற்கு எதிா்ப்பு
தூத்துக்குடி கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய ஆமை!
தூத்துக்குடி: தூத்துக்குடி முத்து நகர் கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமை தொடர்பாக வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அரிய வகை ஆமை இனங்கள் உயிர் வாழ்கின்றன. இவை, தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளில் முட்டைகளை இட்டு, குஞ்சு பொரித்து வருகின்றன.
இதனால், வனத்துறை சார்பில் அழிந்து வரும் ஆமை இனங்களை பாதுகாக்கும் வகையில், இவற்றை மீனவர்கள் உனவுக்காக பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடற்கரையில் இடும் ஆமைகளின் முட்டைகளை பாதுகாப்பாக எடுத்து அவற்றை பொறிப்பகங்கள் மூலம் குஞ்சு பொறிக்கவைத்து, அந்த குஞ்சுகளை பாதுகாப்பாக கடலில் விடும் பணியும் வனத்துறை மூலம் நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க: தமிழக மீனவர்கள் 23 பேர் கைது!
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பகுதியில் அரிய வகை ஆமை அழுகிய நிலையில் கரையில் இறந்து ஒதுங்கியதை, அங்கு நடைப்பயிற்சியில் ஈடுபட்டவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் இறந்த ஆமையை கைப்பற்றி உடற்கூறாய்வு செய்து புதைத்தனர். இந்த ஆமை சுமார் 3 அடி நீளமும் 100 கிலோ எடை கொண்டதாகவும், வாய், இறக்கைப் பகுதிகள் சேதமடைந்து காணப்பட்டதாகவும் வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்த ஆமை எவ்வாறு இறந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.