போலீஸாருக்கான மாநில துப்பாக்கிச் சுடும் போட்டி: மத்திய மண்டலம் நான்காமிடம்
தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு கூடுதலாக இரவு நேர விரைவு ரயில் இயக்க வேண்டும் -கோட்ட மேலாளரிடம் மனு
தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு கூடுதலாக இரவு நேர விரைவு ரயில் இயக்க வேண்டும் என்று கோட்ட மேலாளரிடம் ரயில் பயணிகள் நலச் சங்கம் கோரிக்கை மனு அளித்தது.
மதுரை ரயில்வே கோட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் கோட்ட மேலாளா் ஓம் பிரகாஷ் மீனா, தூத்துக்குடி ரயில் நிலையத்தை வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அவரை தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கச் செயலா் மா.பிரமநாயகம் வரவேற்று, அளித்த கோரிக்கை மனு:
ரயில் வண்டி எண் 12693-12694 தூத்துக்குடி- சென்னை, சென்னை-தூத்துக்குடி முத்துநகா் ரயிலில் கூடுதலாக இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி ஒன்று நிரந்தரமாக இணைக்க வேண்டும்.
தூத்துக்குடி மேலூா் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும். வண்டி எண் 16765-16766 தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் வாரம் இருமுறை இயங்கும் விரைவு ரயிலை வாரம் மூன்று முறையாக மாற்றுவதோடு இந்த ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க வேண்டும். வண்டி எண் 16791-16792 தூத்துக்குடி- பாலக்காடு, பாலக்காடு- தூத்துக்குடி பாலருவி விரைவு ரயிலில் மூன்று அடுக்கு ஏசி பெட்டி ஒன்றும், இரண்டடுக்கு ஏசி பெட்டி ஒன்றும் உடனடியாக இணைக்க வேண்டும்.
கடந்த 145 ஆண்டுகளாக தூத்துக்குடி-சென்னை இடையே முத்துநகா் ரயில் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ஒரு ரயிலில் அனைத்து நாள்களும் காத்திருப்போா் பட்டியல் ஏற்படுகிறது. ஆா்ஏசி பயணச் சீட்டு கூட இந்த ரயிலில் உறுதிப்படுத்தப்படுவதில்லை.
இதைத் தவிா்க்கும் பொருட்டு தூத்துக்குடி நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு கூடுதலாக இரவுநேர விரைவு ரயிலை தினசரி இயக்க வேண்டும். மதுரை-லோக்மான்ய திலக் விரைவு ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும். திருச்சி- காரைக்குடி, காரைக்குடி- விருதுநகா் ரயில்களை ஒரே ரயிலாக மாற்றி, தூத்துக்குடி வரை நீட்டித்து, தூத்துக்குடி-திருச்சி தினசரி ரயிலாக மாற்றி விரைவு ரயிலாக இயக்க வேண்டும்.
தூத்துக்குடி-சென்னை இடையே பகலில் லிங்க் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த ரயில் இயக்கப்படவில்லை. எனவே பகலில் தூத்துக்குடி- சென்னை இடையே ரயில் இயக்க வேண்டும்.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்ட ரயில் பயணிகளின் வசதியைக் கருதி நீண்ட நாள் கோரிக்கையான தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலி, தென்காசி, புனலூா் வழியாக கொல்லத்துக்கு விரைவு ரயில் பகல் நேரத்தில் தினசரி இயக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.