Sunita Williams Return: `விண்வெளி டு பூமி' - பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லிய...
தென்காசி: அரசு அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட முன்னாள் முதல்வர் புகைப்படம்; அதிமுக-வினர் கண்டனம்!
தென்காசி நகரப் பகுதியில் புது பஸ்டாண்ட் செல்லும் வழியில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் முன்னாள், இந்நாள் தமிழக முதல்வர்களின் போட்டோக்கள் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெ.ஜெயலலிதாவின் போட்டோவை அடையாளம் தெரியாத யாரோ சிலர் கோட்டாட்சியர் அலுவலக குப்பையில் போட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்களுள் சிலர், குப்பையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போட்டோ கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனால் ஏற்பட்ட மனப்பொருமலில், தமிழகத்தின் முன்னாள் முதல்வருக்கே இந்த நிலைமையா? இறந்தவர்களுக்கான மதிப்பும், மரியாதையும் இவ்வளவுதானா? என அங்கிருந்த வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கிடையே, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா புகைப்படம் தென்காசி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாக குப்பையில் கிடந்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில், இது குறித்து தகவலறிந்த தென்காசி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலக ஊழியர்களை வைத்தே, குப்பையில் வீசப்பட்டு கிடந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை மீண்டும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு எடுத்துச்செல்ல வைத்தனர்.

இருந்தபோதும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை குப்பையில் போட்ட அதிகாரிகள் யார்? அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்மாவட்ட அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் கண்டன குரல்கள் எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.