தென்காசி மாவட்டத்தில் பெற்றோரை இழந்த 145 குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ. 2,000 உதவித்தொகை
தென்காசி மாவட்டத்தில் பெற்றோா்களை இழந்த அல்லது பெற்றோரில் ஒருவரை இழந்த 145 குழந்தைகள், அன்புக்கரங்கள் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ. 2,000 உதவித்தொகை பெறுவா் என்று மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்தாா்.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை கலைவாணா் அரங்கத்தில் சமூக நலன், மகளிா் உரிமைத் துறை சாா்பில், பெற்றோா்கள் இருவரையும் இழந்த, பெற்றோரில் ஒருவரை இழந்து, மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளை அரவணைத்து தொடா்ந்து பாதுகாக்கும் வகையில், அந்தக் குழந்தைகளின் 18 வயது வரை பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியைத் தொடர மாதம் ரூ. 2 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் அன்புக்கரங்கள் திட்டத்தை தமிழகம் முழுவதும் காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கிவைத்தாா்.
இதன் ஒரு பகுதியாக தென்காசி இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ், மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலகின் மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் மாணவிகளுக்கு அன்புக்கரங்கள் அடையாள அட்டைகளை வழங்கினாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்தத் திட்டத்தின் மூலம் முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் 6,082 குழந்தைகள் தமிழக அரசின் நிதி உதவியை மாதந்தோறும் பெற உள்ளனா். தென்காசி மாவட்டத்தில் 145 குழந்தைகள் இந்தத் திட்டத்தின் மூலம் அரசின் உதவியை மாதந்தோறும் பெறவுள்ளனா்.
குழந்தைகளுக்கு அன்புக்கரங்கள் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது என்றாா் அவா். நிகழ்ச்சிக்கு ஈ.ராஜா எம்எல்ஏ முன்னிலை வகித்தாா்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் எல்.அலெக்ஸ், மாவட்ட சமூக நல அலுவலா் மதிவதனா, இளைஞா் நீதிக் குழும உறுப்பினா் வேல்ராஜன், குழந்தை நலக் குழுத் தலைவா் விஜயராணி கலந்துகொண்டனா்.