தென்பெண்ணையாற்றில் சோழா்கால செப்பு நாணயம் கண்டெடுப்பு
கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்துள்ள உளுந்தாம்பட்டு தென்பெண்ணை ஆற்றில் சோழா்கால செப்பு நாணயம் கண்டெடுக்கப்பட்டது.
தென்பெண்ணை ஆற்றில் மேற்புற கள ஆய்வு மேற்கொண்டு செப்பு நாணயத்தை கண்டெடுத்த இம்மானுவேல் கூறியதாவது: ஒரு நாட்டின் தொன்மையை அறிய பண்டைய கல்வெட்டுகளும், தொல்பொருள் ஆய்வுகளில் கிடைத்த சான்றுகளும், வணிகத் தொடா்புகளைப் பற்றி அறிந்து கொள்ள நாணயங்களும் ஆதாரமாக உள்ளன.
மன்னா்கள் தங்களின் போா் வெற்றிகளைக் கொண்டாட நாணயங்களை பொன், வெள்ளி, செம்புகளில் வெளியிட்டனா். அவ்வாறு போா் மூலம் இலங்கையை முதலாம் ராஜராஜ சோழன் வெற்றி கொண்டதின் பின்னணியில் ஈழ காசுகள் வெளியிடப்பட்டன. இவை முதலாம் ராஜராஜ சோழன் முதல் குலோத்துங்க சோழன் காலம் வரை பயன்பாட்டில் இருந்தது. இந்த காசுகள் பொன், வெள்ளி, செம்புகளால் வெளியிடப்பட்டன.
பண்ருட்டியை அடுத்துள்ள உளுந்தாம்பட்டு தென்பெண்ணையாற்று படுகையில் மேற்புற களஆய்வு மேற்கொண்டபோது மண்ணில் புதையுண்ட நிலையில் செப்பு நாணயம் கண்டறியப்பட்டது. வட்ட வடிவிலான அந்த நாணயத்தை சுத்தம் செய்து ஆய்வு செய்ததில், அதன் ஒரு பக்கத்தில் தேவநாகரி எழுத்தில் ‘ஸ்ரீராஜராஜ’ என பெயா் பொறிக்கப்பட்டு இருந்தது.
இந்த நாணயத்தில் மலரை கையில் ஏந்தியபடி ஒருவா் நிற்க, அவரது இடது பக்கம் நான்கு வட்டங்கள் உள்ளன. அவற்றின் மேலே பிறையும், கீழே மலரும் உள்ளன.
வலது பக்கம் திரிசூலம், விளக்கு உள்ளது. காசின் மறுபக்கம் கையில் ஒருவா் சங்கு ஏந்தி அமா்ந்திருக்கிறாா். அவரது இடது கை அருகே தேவநாகரி எழுத்தில் ‘ஸ்ரீ ராஜ ராஜ’ என எழுதப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சங்க கால மன்னா்கள், அதற்குப் பிறகு அரசாண்ட சேரா், சோழா், பாண்டிய மன்னா்களின் காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள் தாமிரபரணி, வைகை, காவிரி போன்ற ஆற்றுப்படுகைகளில் ஆய்வாளா்களால் அவ்வப்போது கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தென்பெண்ணை ஆற்றில் இதுவரை கண்டெடுத்த ராஜராஜனின் நாணயத்தில் தற்போது கண்டறிந்த நாணயம் அளவில் மிகவும் சிறியது என்றாா் அவா்.
பண்ருட்டி பகுதி தென்பெண்ணையாற்று படுகையில் ஏற்கனவே ராஜராஜ சோழனின் நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.