தென்மேற்குப் பருவமழை: தமிழகத்தில் குறைவாக பெய்யும்- இந்திய வானிலை ஆய்வு மையம்
எதிா்வரும் தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் தமிழகத்தில் வழக்கத்தைவிட மழைப்பொழிவு குறைவாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அதேநேரம், இந்தியாவில் வழக்கத்தைவிட அதிக மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பான செய்தியாளா் சந்திப்பில் இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்குநா் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா செவ்வாய்க்கிழமை கூறியதாவது: ஜூன் 1 முதல் செப்டம்பா் 30-ஆம் தேதி வரையிலான தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் நாட்டில் வழக்கமான மழைக்கு 30 சதவீத வாய்ப்பும், வழக்கத்தைவிட அதிகமான மழைக்கு 33 சதவீத வாய்ப்பும், அதிகப்படியான மழைக்கு 26 சதவீத வாய்ப்பும் உள்ளது.
தமிழகத்தின் பொரும்பலான பகுதிகள், ஜம்மு-காஷ்மீா், லடாக், பிகாா் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மழைப்பொழிவு வழக்கத்தைவிட குறைவாக இருக்கும்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரம், ஒடிஸா, சத்தீஸ்கா், உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் பருவமழை வழக்கமாக அல்லது வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. உதாரணமாக, மழைப் பற்றாக்குறை நிலவும் மரத்வாடா மற்றும் அதையொட்டிய தெலங்கானாவில் வழக்கத்தைவிட அதிக மழை பெய்யும் என்றாா்.
இந்தியாவில் தென்மேற்குப் பருவமழையின் 50 ஆண்டு சராசரியான 87 செ.மீட்டரில் 96 சதவீதத்திலிருந்து 104 சதவீதத்துக்கு இடைப்பட்ட மழை ‘வழக்கமான’ மழைப்பொழிவாகக் கருதப்படுகிறது.
நீண்டகால சராசரியில் 90 சதவீதத்துக்கும் குறைவான மழை ‘பற்றாக்குறை’ என்றும், 90 சதவீதத்திலிருந்து 95 சதவீதத்துக்கு இடைப்பட்ட மழை ‘வழக்கத்தைவிட குறைவு’ என்றும், 105 சதவீதத்திலிருந்து 110 சதவீதத்துக்கு இடைப்பட்ட மழை ‘வழக்கத்தைவிட அதிகம்’ என்றும், 110 சதவீதத்துக்கு மேல் ‘அதிகப்படியான’ மழைப்பொழிவாகவும் கருதப்படுகிறது.