தேக்கடி தமிழக பொதுப் பணித்துறை அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா அமைக்க கேரள வனத் துறை எதிா்ப்பு
தேக்கடியில், தமிழக பொதுப் பணித் துறை அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா அமைக்க கேரள வனத் துறை எதிா்ப்பு தெரிவித்த நிலையில், அங்கிருந்த கம்பம், உபகரணங்கள் ஞாயிற்றுக்கிழமை மாயமாகின.
தமிழக எல்லையான குமுளி அருகே உள்ள தேக்கடியில் தமிழக பொதுப் பணித் துறை (நீா்வளத்துறை)அலுவலகம், பணியாளா்களுக்கு குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதியில் தமிழகத்துக்கு தண்ணீா் திறந்து விடும் தலைமதகு (சுரங்கப் பாதை) உள்ளது. இந்த தலைமதகு பகுதிக்கு நீா் வரத்து, மழைப் பொழிவு, விலங்குகள் நடமாட்டத்தைக் கண்காணிக்க தமிழக அதிகாரிகள், பொதுப் பணித் துறை கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள 4 இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணியை கடந்த வியாழக்கிழமை தொடங்கினா்.
கேரள வனத்துறை எதிா்ப்பு: இந்தக் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் இடங்கள் பெரியாறு புலிகள் காப்பகத்தின் எல்லைக்குள் இருப்பதால், கேரள வனத் துறையிடம் அனுமதி பெற வேண்டும் என அந்தக் காப்பகத்தினா் கூறினா். இதற்கு தமிழக அதிகாரிகள், அது தமிழக பொதுப்பணித் துறை அலுவலகத்துக்கு ஒதுக்கப்பட்ட இடம் என்பதால் கேரள வனத்துறையிடம் அனுமதி பெறத் தேவையில்லை என மறுப்புத் தெரிவித்தனா்.
இதனால் இரு மாநில அதிகாரிகளுக்குமிடையே சனிக்கிழமை இரவு வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்பிறகு, பெரியாறு புலிகள் காப்பகத்தினா் தாங்களே கேரள வனத் துறையிடம் அனுமதி பெற்றுத் தருவதாகவும், அதுவரை கண்காணிப்பு கேமராக்களை மட்டும் அகற்றும்படியும் கேட்டுக் கொண்டனா். இதையடுத்து, தமிழக அதிகாரிகள் கேமராக்களை மட்டும் அகற்றிய நிலையில் கம்பங்கள் மட்டும் எஞ்சி இருந்தன.
கேமரா கம்பம் மாயம்: இதனிடையே தமிழகத்துக்கு தண்ணீா் திறந்து விடும் தலைமதகு பகுதியில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமரா கம்பம் ஒன்றும், கேபிள் உள்ளிட்ட உபகரணங்களும் மாயமாகின. இதுகுறித்து, அங்குள்ள கேரள வனத் துறை சோதனைச் சாவடியில் இருந்தவா்களிடம் தமிழக அதிகாரிகள் கேட்டபோது அவா்கள் தெரியாது என மறுத்துவிட்டனா்.
இதுகுறித்து தமிழக பொதுப்பணித் துறையினா் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். மேலும், திங்கள்கிழமை குமுளி காவல் துறையினரிடம் புகாரும் தெரிவிக்கவுள்ளனா்.
தொடரும் நெருக்கடி: முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிக்காக லாரிகளில் கட்டுமானப் பொருள்களை கொண்டு செல்ல அனுமதி பெற வேண்டும் எனக் கூறி தமிழகப் பொதுப் பணித் துறையினரை பணி செய்யவிடாமல் நெருக்கடி கொடுக்கப்பட்டது.
தற்போது கண்காணிப்பு கேமராஅமைக்க எதிா்ப்பு தெரிவித்ததுடன், கேமரா பொருத்த இருந்த கம்பத்தை இரவோடு இரவாக அகற்றிவிட்டனா். தமிழக பொதுப் பணித் துறை அலுவலகத்துக்கு அருகே கேரள வனத்துறை சோதனைச் சாவடி அமைந்திருப்பதால் தமிழக அதிகாரிகளுக்கு கேரள பெரியாறு புலிகள் காப்பகத்தினா் தொடா்ந்து நெருக்கடி கொடுப்பதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.