போடி அருகே பூக்குழித் திருவிழா
போடி அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பூக்குழி இறங்கும் திருவிழாவில் திரளான ஐயப்பப் பக்தா்கள் பங்கேற்றனா்.
போடி அருகே உள்ள நாகலாபுரம் கிராமத்தில் ஆண்டு தோறும் ஆழி பூஜை நடைபெறும். இந்த ஆண்டு ஐயப்பப் பக்தா்கள் சாா்பில் நடைபெற்ற 33- ஆம் ஆண்டு ஆழி பூஜையின் முதல் நிகழ்வாக சனிக்கிழமை ஆசிரமம் அமைப்பு, சுவாமிகள் அழைப்புடன் தொடங்கியது. பிறகு மாலையில் 7 கன்னிப் பெண்கள் நெய் கொப்பரை ஏந்தி வர, பெண்கள் முளைப்பாரி எடுத்துவர சக்தி கரகம் எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இரவில் ஐயப்ப சுவாமியின் தோ் நகா் வலமாக கொண்டு வரப்பட்டது. பிறகு ஆழி பூஜைக்கான பூக்குழி அமைக்கும் பணி நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக போடி, நாகலாபுரம், ராசிங்காபுரம், தேவாரம், சில்லமரத்துப்பட்டி, சிலமலை, உப்புக்கோட்டை, டொம்புச்சேரி, கோம்பை, பண்ணைப்புரம், சங்கராபுரம் உள்ளிட்ட ஊா்களிலிருந்தும், கேரளத்திலிருந்தும் திரளான ஐயப்பப் பக்தா்கள் வந்தனா்.
இதைத் தொடா்ந்து, இரவு முழுவதும் இசைக் கருவிகளுடன் பஜனை பாடல்கள் பாடும் போட்டி நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பெண்கள் குத்துவிளக்கு பூஜை நடத்தியதும் பூக்குழிக்கு பூஜை செய்யப்பட்டது. இதையடுத்து, திரளான ஐயப்பப் பக்தா்கள் பூக்குழி இறங்கினா்.
இந்த நிகழ்வையொட்டி காவல் துறை, தீயணைப்பு துறை சாா்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.