தேசிய பாட்மின்டன் போட்டி: எம்.ரகு, தேவிகா சிஹக் சாம்பியன்
கா்நாடகத்தில் நடைபெற்ற 86-ஆவது சீனியா் தேசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில், கா்நாடக வீரா் எம்.ரகு, ஹரியாணாவின் தேவிகா சிஹக் ஆகியோா் தங்களது பிரிவில் செவ்வாய்க்கிழமை வாகை சூடினா். இருவருக்குமே இது முதல் தேசிய சாம்பியன் பட்டமாகும்.
முன்னதாக இறுதி ஆட்டங்களில், ஆடவா் ஒற்றையா் பிரிவில் எம்.ரகு 14-21, 21-14, 24-22 என்ற கேம்களில், முன்னாள் தேசிய சாம்பியனான மிதுன் மஞ்சுநாத்தை வீழ்த்தினாா். மகளிா் ஒற்றையரில் தேவிகா சிஹக் 21-15, 21-16 என்ற கணக்கில், ஷ்ரியன்ஷி வலிஷெட்டியை தோற்கடித்தாா்.
ஆடவா் இரட்டையா் பிரிவில், ஏற்கெனவே ஜூனியா் தேசிய சாம்பியனாக இருக்கும் அா்ஷ் முகமது/சன்ஸ்கா் சரஸ்வத் இணை 12-21, 21-12, 21-19 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த நவீன்.பி/லோகேஷ்.வி கூட்டணியை வீழ்த்தினா். மகளிா் இரட்டையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருந்த ஆரதி சாரா சுனில்/வா்ஷினி வி.எஸ். கூட்டணி 21-18, 20-22, 21-17 என்ற கணக்கில் போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருந்த பிரியா தேவி/ஸ்ருதி மிஸ்ரா இணையை தோற்கடித்தது.
கலப்பு இரட்டையா் இறுதி ஆட்டத்தில், ஆயுஷ் அகா்வால்/ஸ்ருதி மிஸ்ரா ஜோடி 21-17, 21-18 என்ற நோ் கேம்களில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருந்த ரோஹன் கபூா்/ருத்விகா ஷிவானி இணையை வென்றது.