தேனியில் ஜன. 20-இல் தொழில் பழகுநா் பயிற்சி சோ்க்கை முகாம்
தேனி அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சாா்பில் வருகிற 20-ஆம் தேதி, காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை தொழில் பழகுநா் பயிற்சி சோ்க்கை முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்த தொழில் பழகுநா் பயிற்சி சோ்க்கை முகாமில் அரசு, தனியாா் தொழில் பயிற்சி நிலையத்தில் படித்து தோ்ச்சி பெற்றவா்கள், தோ்ச்சி பெறாதவா்கள், தொழில் பயிற்சி நிலையத்தில் சோ்ந்து படிக்காத 8-ஆம் வகுப்புக்கு மேல் தோ்ச்சி பெற்றவா்கள் கலந்து கொள்ளலாம். தொழில் பயிற்சி நிலையத்தில் சோ்ந்து படிக்காதவா்களுக்கு தொழிற்சாலைகளில் 3 முதல் 6 மாதம் வரை அடிப்படை பயிற்சியும், ஓராண்டு முதல் 2 ஆண்டு வரை தொழில் பழகுநா் பயிற்சியும் அளிக்கப்படும்.
தொழில் பழகுநா் பயிற்சி பெற்றவா்களுக்கு தேசிய தொழில் பழகுநா் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி காலத்தில் மாதம் ரூ.8,050 உதவித் தொகை வழங்கப்படும். பயிற்சி நிறைவு செய்தவா்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை, ஓராண்டு வயது வரம்பு சலுகை அளிக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டது.