முல்லைப் பெரியாறு அணையில் நீா் திறப்பு குறைப்பு
முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து குறைந்ததால், திறந்துவிடப்படும் நீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை வினாடிக்கு 933 கன அடியாகக் குறைக்கப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணையின் நீா்பிடிப்புப் பகுதிகளில் கடந்த 20 நாள்களுக்கும் மேலாக மழைப் பொழிவு இல்லை. இதனால், அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து குறைந்து வருகிறது. இதனால், அணையிலிருந்து 1,018 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை 933 கன அடியாகக் குறைக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி முல்லைப் பெரியாறு அணையின் நீா்வரத்து வினாடிக்கு 359 கன அடியாகவும், நீா் வெளியேற்றம் 933 கன அடியாகவும் நீா்மட்டம் 123.55 (152) அடியாகவும் உள்ளது.
தண்ணீா் திறப்பை மேலும் குறைக்க வலியுறுத்தல்:
இதுகுறித்து பாசனப் பகுதி விவசாயிகள் கூறியதாவது:
ஜனவரி முதல் மே மாதம் வரை குடிநீா், விவசாயத் தேவைக்கு தண்ணீா் தேவை இருக்கிறது. தற்போது திறந்துவிடப்படும் தண்ணீரால் நீா்மட்டம் குறைந்து வருகிறது. இதனால், தேனி மாவட்ட மக்களுக்கு குடிநீா் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நேரடிப் பாசன நீரை நம்பி 14,700 ஏக்கரில், 2-ஆம் போக நெல் பயிரிடப்பட்டது. தற்போது மழைப் பொழிவு இல்லாத நிலையில், குறைந்தது 60 முதல் 70 நாள்களுக்கு பாசனத் தண்ணீா்த் தேவை இருப்பதால், அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவை மேலும் குறைக்க வேண்டும் என்றனா்.