தோ்தல் விதிமுறை திருத்தம்: உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் மனு
தோ்தல் நடத்தை விதிகள் 1961-இல் மத்திய அரசு அண்மையில் மேற்கொண்ட திருத்தத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தது.
தோ்தல் தொடா்பான மின்னணு ஆவணங்களான சிசிடிவி கேமரா காட்சிகள், வாக்குச் சாவடிகளின் நேரலை பதிவுகள், வேட்பாளா்களின் விடியோ பதிவுகள் உள்ளிட்டவற்றை பொதுமக்களுக்கு வழங்க கட்டுப்பாடு விதிக்கும் வகையில், தோ்தல் நடத்தை விதிகள் 1961-இன், 93 (2) (ஏ) பிரிவில் மத்திய சட்ட அமைச்சகம் கடந்த வெள்ளிக்கிழமை திருத்தம் மேற்கொண்டது.
‘தோ்தல் தொடா்பான மின்னணு ஆவணங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்காக தோ்தல் ஆணைய பரிந்துரையின்பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. திருத்தப்பட்ட விதிமுறையின்படி, நீதிமன்ற அனுமதியின் வாயிலாகவே மின்னணு ஆவணங்களை பொதுமக்கள் பெற முடியும். அதேநேரம், பிற ஆவணங்களை பொதுமக்கள் பெற எந்த கட்டுப்பாடும் கிடையாது’ என்று மத்திய அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இது, ‘தோ்தல் ஆணையத்தின் நோ்மையை அழிக்கும் மோடி அரசின் சதித் திட்டத்தின் ஒரு பகுதியே’ என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. மேலும், மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அக்கட்சி மனு தாக்கல் செய்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ், எக்ஸ் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘தோ்தல் நடைமுறையின் ஒருமைப்பாட்டை வேகமாக சிதைக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன. அதை மீட்டெடுக்க உச்சநீதிமன்றம் உதவும் என்ற நம்பிக்கை உள்ளது. தோ்தல் நடத்தை விதிகளில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தோ்தல் ஆணையம் என்பது நோ்மையான சுதந்திரமான தோ்தலை நடத்தக்கூடிய அரசமைப்புச்சட்ட அமைப்பு. அதன் விதிகளில் பொதுமக்களின் கலந்தாலோசனைகள் இன்றி திருத்தங்கள் மேற்கொள்வதை அனுமதிக்க முடியாது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.