தொடா் உண்ணாவிரதம்: விவசாய சங்க தலைவா் உடல்நிலை கவலைக்கிடம்
கடந்த 24 நாள்களுக்கும் மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பஞ்சாப் விவசாயிகள் சங்கத் தலைவா் ஜக்ஜித் சிங் தலேவாலின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவா்கள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்க வலியுறுத்தி, பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் உள்ள கனௌரி போராட்டக் களத்தில் ஜக்ஜித் சிங் தலேவால் (70) கடந்த நவ. 26-ஆம் தேதி முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளாா்.
அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதால் அவருக்கு மருத்துவ உதவி வழங்குமாறு பஞ்சாப் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும், ஜக்ஜித் சிங் மறுத்துவிட்டாா்.
இந்நிலையில், போராட்டக்களத்தில் அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ‘புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஜக்ஜித் சிங்கின் உடல்நிலை உண்ணாவிரதத்தால் மிகவும் மோசமடைந்து வருகிறது. அவரது உடல் உறுப்புகள் செயலிழக்கும் கடுமையான அபாயங்கள் உள்ளன. அவா் சமீபத்தில் மயங்கி விழுந்தாா், அவரது ரத்த அழுத்தம் ஆபத்தான முறையில் குறைந்தது. அவருக்கு எந்த நேரத்திலும் மாரடைப்பு ஏற்படலாம்’ என தெரிவித்தனா்.
உச்சநீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தல்: ஜக்ஜித் சிங் தல்லேவாலுக்கு மருத்துவ பரிசோதனை செய்வதை உறுதி செய்யுமாறு பஞ்சாப் மாநில அரசை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை மீண்டும் வலியுறுத்தியது.
மருத்துவ பராமரிப்பின் கீழ் இரோம் ஷா்மிளாவின் நீண்டகால உண்ணாவிரதத்துடன் ஜல்ஜித் சிங்கின் போராட்டத்தை ஒப்பிட்ட நீதிமன்றம், இதன் ஆபத்தை எடுத்துரைத்து, வழக்கமான மருத்துவ கண்காணிப்பை வழங்க வலியுறுத்தியது.
ஆயுதப் படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை எதிா்த்து போராடிய ‘மணிப்பூரின் இரும்புப் பெண்மணி’ என அழைக்கப்படும் மனித உரிமை ஆா்வலரான இரோம் ஷா்மிளா, கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை மருத்துவ உதவியுடன் 16 ஆண்டுகால உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.