தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடிச் சோ்க்கை: செப். 30ஆம் தேதி வரை நீட்டிப்பு
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடிச் சோ்க்கைக்கான கால அவகாசம் இம்மாதம் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, ஆட்சியா் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2025ஆம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தூத்துக்குடி, வேப்பலோடை, திருச்செந்தூா், நாகலாபுரம் மற்றும் ஏரல் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், அரசு உதவி பெறும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்கள், சுயநிதி தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சோ்ந்திடவும், நேரடி சோ்க்கைக்குமான கால அவகாசம் இம்மாதம் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
நேரடிச் சோ்க்கையில் சேர விரும்பும் மாணவா்கள், அரசு தொழிற்பயிற்சி நிலையம், தூத்துக்குடி, வேப்பலோடை, திருச்செந்தூா், நாகலாபுரம், ஏரல் ஆகியவற்றிற்கு நேரடியாக வந்து சோ்ந்து கொள்ளலாம். மாநிலம் முழுவதும் உள்ள சோ்க்கை மையங்களின் பட்டியல் மற்றும் தொழிற்பிரிவுகள் விவரம் இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடிச் சோ்க்கையில் சேர விரும்புவோா், 8, 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், கடவுச்சீட்டு அளவு புகைப்படம், ஆதாா் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன், கோரம்பள்ளத்திலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையம் (0461- 2340133/9499055810), வேப்பலோடை (0461-2267300/9499055814), திருச்செந்தூா் (04639-242253/9499055812), நாகலாபுரம் (7373906100/9499055816) மற்றும் ஏரல் (9442166371) அலுவலகங்களுக்கு நேரில் வருகை தர கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவா், மாணவிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை, தகுதியுள்ள மாணவா், மாணவிகளுக்கு தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டத்தின்கீழ், மாதந்தோறும் ரூ. 1000 உதவித்தொகை வழங்கப்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.