நடத்தையில் சந்தேகம்: மனைவியை சரமாரியாக வெட்டிய கணவன் தற்கொலை
தேன்கனிக்கோட்டையில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன், மனைவியை கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, கோட்டைவாசல் பகுதியில் வசித்து வரும் ராமசாமி (55), கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி முனியம்மாள் (40), தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையத்தில் பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறாா். இவா்களுக்கு இரண்டு ஆண்கள், ஒரு பெண் என மூன்று பிள்ளைகள் உள்ளனா். மூவரும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனா். ராமசாமியும், முனியம்மாளும் ஒரே வீட்டில் வசித்து வந்தனா். முனியம்மாளின் நடத்தையில் சந்தேகப்பட்ட ராமசாமி அவ்வப்போது அவரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளாா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராமசாமி, ஆத்திரமடைந்து முனியம்மாளை கத்தியால் சரமாரியாக வெட்டி உள்ளாா். படுகாயங்களுடன் அலறியபடி வீட்டைவிட்டு வெளியே ஓடிவந்த முனியம்மாளை, அக்கம் பக்கத்தினா் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விவகாரம் வெளியே தெரிந்ததால் அச்சமடைந்த ராமசாமி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று ராமசாமியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பலத்த காயமடைந்த முனியம்மாள் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.