கனடாவுக்கு உயர் கல்வி பயிலச் சென்ற இந்திய மாணவி சுட்டுக் கொலை!
நமக்குள்ளே...
தங்களை விடாமல் துரத்தும் வீட்டு வேலைகள் குறித்து, ‘நானெல்லாம் செத்தாலும், எங்க வீட்டுல சமைச்சு வெச்சுட்டுத்தான் போய் சுடுகாட்டுல படுத்துக்கணும்’ என்று வேடிக்கையாக பெண்களில் சிலர் சொல்வதுண்டு. அவை, வேதனையில் விளைந்த வார்த்தைகள்.
டெல்லியைச் சேர்ந்தவர், 39 வயது ஆசிரியர் அன்விதா ஷர்மா. சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டவர், தன் கணவருக்கு எழுதிவைத்த கடிதத்தில், ‘உங்களுக்கு உணவை சமைத்து வைத்துவிட்டேன், சாப்பிடுங்கள்’ என்ற குறிப்பிட்டு முடித்திருப்பது, அந்த வேடிக்கை... வேதனை எந்தளவுக்கு உண்மை என்பதை வெளிச்சமிட்டிருக்கிறது.
பெற்றோருக்கு எழுதியுள்ள தற்கொலை கடிதத்தின் ஒவ்வொரு வரியும், நம் சமூகத்தில் பெண்களை அழுத்தும் குடும்ப வன்முறையின் அப்பட்ட பிரதிபலிப்பு. `கணவர், என் வேலையைத்தான் மணந்துள்ளார், என்னையல்ல. என் வங்கிக் கணக்கு, செக் புக் எல்லா வற்றிலும் அவருக்கு அணுகல் உள்ளது’ என்று அன்விதா குறிப்பிட்டுள்ளது, பணிக்குச் செல்லும் பெண்களின் சம்பளம்... இன்று `நவீன டாப் அப் வரதட்சணை’ ஆகியுள்ளதைச் சொல்கிறது.

அன்விதாவின் பெற்றோரிடமிருந்து திருமணத்தின்போது 26 லட்சம் ரூபாய் வரதட்சணையும், ஒரு காரும் வற்புறுத்திப் பெறப்பட்டுள்ளது. அவரின் கணவர் ஒரு மருத்துவர். அன்விதா ஓர் ஆசிரியர். இவர்கள் வசிப்பது டெல்லி என்ற மெட்ரோபாலிட்டன் சிட்டியில். இங்கேயே இந்தளவுக்கு வரதட்சணைக் கொடுமை என்றால், படிப்பறிவில்லாத, கிராமங்களில் உள்ள பெண்களைப் பெற்றவர்களின் நிலை?
`புகுந்த வீட்டினருக்குத் தேவைப்பட்டதெல்லாம், பணிக்குச் செல்லும் ஒரு வேலையாள்’ என்ற அன்விதாவின் வரி, வொர்க் - லைஃப் பேலன்ஸில் பெண்களுக்குக் கிஞ்சிற்றும் உதவாத குடும்பங்கள், அவர்களின் இரட்டைச்சுமை குறித்து எந்தப் பிரக்ஞையும் இன்றி அவர்களை எந்தளவுக்குத் துன்புறுத்துகின்றன என்பதற்கான சாட்சி.
தன் நான்கு வயது ஆண் குழந்தை பற்றி அன்விதா எழுதியிருக்கும் வரி மிக முக்கியமானது... ‘என் குழந்தையைப் பார்த்துக் கொள்ளுங்கள். அவன், தன் அப்பா போல வரக்கூடாது!’ ஆணாதிக்க, வன்முறையான குடும்ப அமைப்பின் குரூரம் மாற்றப்பட வேண்டியதை, குழந்தையையே முன்வைத்தே சொல்லியிருக்கிறார்.
நூற்றாண்டுகளாகப் புரையோடிப் போயிருக்கும் குடும்ப வன்முறையைக்கூட, இன்றும் ஒரு பெண் தன்னை பலி கொடுத்தே பேசவைக்க வேண்டியிருக்கிறது என்பது, அவலம். பெண்கள், தங்கள் மனிதவளத்தை வீட்டுவேலைகளில் கரைக்காமல் பணியாள், டே கேர் எனத் தங்களுக்கான சப்போர்ட்டிங் சிஸ்டத்தை அமைத்துக்கொள்ள வேண்டும். தங்கள் உழைப்பை, வருமானம் ஈட்டும் வழிகளில் செலவிட வேண்டும். இரட்டைச் சுமையில் தள்ளும் குடும்பங்கள் திருந்த வேண்டும் அல்லது விழிப்பு உணர்வு, சட்ட தண்டனை என திருத்தப்பட வேண்டும்.
இனியொரு அன்விதாவை இழக்கக்கூடாது தோழிகளே!
உரிமையுடன்,
ஸ்ரீ
ஆசிரியர்