நள்ளிரவில் தேர்தல் ஆணையர் நியமனம் அவமரியாதைக்குரியது: ராகுல்
உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், பிரதமரும், உள்துறை அமைச்சரும் நள்ளிரவில் புதிய தலைமைத் தேர்தல் ஆணையரை தேர்வு செய்தது அவமரியாதைக்குரியது என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இந்திய தலைமைத் தோ்தல் ஆணையராக தற்போதுள்ள ராஜீவ் குமாா் இன்று (பிப்.18) ஓய்வுபெறுகிறாா். இந்நிலையில் புதிய தலைமைத் தோ்தல் ஆணையரை தோ்வு செய்வதற்கான தோ்வுக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிலையில், தற்போதைய தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரின் பெயா் தோ்வு செய்யப்பட்டது. இதை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவின் ஒப்புதல் பெற்று மத்திய சட்ட அமைச்சகம் திங்கள்கிழமை இரவு அறிவித்தது. மேலும், 1989- ஹரியாணா பிரிவு ஐஏஎஸ் விவேக் ஜோஷி தோ்தல் ஆணையராக அறிவிக்கப்பட்டுள்ளாா்.
தோ்தல் ஆணையா்கள் தோ்வுக் குழுவிலிருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கி மத்திய அரசு கொண்டுவந்த புதிய சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் புதன்கிழமை (பிப்.19) விசாரிக்க உள்ளது. அதுவரை புதிய தலைமைத் தோ்தல் ஆணையா் தோ்வை மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தரப்பில் திங்கள்கிழமை வலியுறுத்தப்பட்டது.
ஆனால், இரவோடு இரவாக குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று புதிய தலைமை தேர்தல் ஆணையரின் பெயரை மத்திய அரசு வெளியிட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
இதையும் படிக்க | தமிழகத்தில் இணையவழி பணமோசடிகள் 2.5 மடங்கு அதிகரிப்பு!
தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் இதற்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற தேர்தல் ஆணையரைத் தேர்வு செய்யும் கூட்டத்தில் எனது எதிர்ப்பைப் பதிவு செய்தேன். 'தேர்தல் ஆணையத்தின் அடிப்படை அம்சமே, எந்த தலையீடும் இல்லாமல் சுதந்திரமான முறையில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பது' என்று கூறினேன்.
உச்சநீதிமன்றத்தில் 48 மணி நேரத்தில் தேர்தல் ஆணையர் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில் அவசரஅவசரமாக தேர்தல் ஆணையரை நியமித்தது ஏன்?
உச்சநீதிமன்ற உத்தரவை மீறி, தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் குழுவில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கியதன் மூலமாக நாட்டின் கோடிக்கணக்கான வாக்காளர்களின் தேர்தல் ஆணையம் குறித்த நேர்மை கேள்விக்குறியாகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அம்பேத்கர் உள்ளிட்ட தேசத் தலைவர்களின் கொள்கைகளை நிலைநிறுத்துவதும், அரசாங்கத்தை பொறுப்பேற்க வைப்பதும் எனது கடமை.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், பிரதமரும், உள்துறை அமைச்சரும் நள்ளிரவில் புதிய தலைமைத் தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய முடிவெடுத்தது அவமரியாதைக்குரியது, மரியாதையற்றது" என்று கூறியுள்ளார்.
இதையும் படிக்க | நீதிமன்ற அவமதிப்பு! தேர்தல் ஆணையர் நியமனத்துக்கு காங்கிரஸ் கண்டனம்!