நேபாள மாணவி தற்கொலை வழக்கு: கல்லூரி நிறுவனர் விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன்!
புவனேசுவரம் : ஒடிசா தலைநகர் புவனேசுவரம் நகரில் அமைந்துள்ள கலிங்கா தொழிற்துறை தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (கேஐஐடி) அக்கல்லூரியில் பயின்று வந்த நேபாள மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கண்ட தனியார் கல்வி நிறுவனத்தில் பி.டெக் கணினி அறிவியல் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த நேபாளத்தைச் சோ்ந்த பிரகிருதி லம்சால் (20) என்ற மாணவி கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்டார்.
அதன்பின், மாணவி மரணத்துக்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் தீவிரமானதைத் தொடர்ந்து, எந்தவொரு முன் அறிவிப்புமின்றி கேஐஐடியில் இருந்து 800-க்கும் மேற்பட்ட நேபாள மாணவ-மாணவிகளை அதிகாரிகள் வலுக்கட்டாயமாக அவா்களது சொந்த ஊா்களுக்கு அனுப்பிவிட்டனா். எனினும், இப்போது அந்த கல்வி நிறுவனத்தில் இயல்புநிலை திரும்பியிருப்பதாகவும் கல்லூரி நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள உள்துறை கூடுதல் தலைமை செயலா் தலைமையில் உயா்கல்வி மற்றும் பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறைகளின் செயலா்கள் அடங்கிய மூன்று நபா் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மாணவி மரண வழக்கு விசாரணையில், கேஐஐடி நிறுவனர் அச்சியுதா சம்ந்தா விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் அவர் வெள்ளிக்கிழமை(பிப். 21) நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.