நாகை: மழைக்கு இடிந்த வீட்டுச் சுவர்; பலியான சிறுவன்; தீவிர சிகிச்சையில் சிறுமி - சோகத்தில் கிராமம்!
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழக பகுதியை நெருங்கி வருகிறது . இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நாகை மாவட்டத்தின் கடலோர பகுதிகளில் பரவலாக நேற்று காலை முதலே கனமழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அடுத்த செம்பியன் மகாதேவி ஊராட்சிக்கு உட்பட்ட விநாயகன் தோப்பு தெருவைச் சேர்ந்தவர்கள் முருகதாஸ்-லெட்சுமி தம்பதியினர்.
இந்தத் தம்பதியின் மகன் கவியழகன், மகள் சுபஸ்ரீ மற்றும் முருகதாஸின் தாயார் உட்பட ஐந்து பேரும், தங்களுக்குச் சொந்தமான கூரை வீட்டில் வசித்து வந்தனர். வழக்கம்போல நேற்று இரவு வீட்டில் படுத்து உறங்கிய போது எதிர்பாராத விதமாக, வீட்டின் பக்கவாட்டு சுவர் கனமழையால் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் அவர்கள் அனைவருமே சிக்கிக்கொண்டனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து இவர்களை மீட்டு உடனடியாக ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் பலத்தக் காயமடைந்து 13 வயது மகன் கவியழகன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். மேலும், முருகதாஸ், அவரின் மகள் சுபஸ்ரீயும் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வருவாய் துறையினர் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். உயிரிழந்த சிறுவன் செம்பியன் மகாதேவி பகுதியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துவந்தார். சிறுவன் உயிரிழந்த நிலையில் அவரது உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் கதறி அழுத காட்சி அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.