இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து ரூ.86.62 ஆக முடிவு!
நாக் மார்க் 2 ஏவுகணை சோதனை வெற்றி: ராணுவ பயன்பாட்டுக்குத் தயாா்
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) சாா்பில் முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய ‘நாக் மார்க்-2’ என்ற புதிய பதிப்பு பீரங்கி எதிா்ப்பு ஏவுகணை சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
‘இந்த புதிய பதிப்பின் சோதனைகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், ராணுவ பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்த தயாா்நிலையை எட்டியுள்ளது’ என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பீரங்கியிலிருந்து ஏவப்பட்டு எதிரி நாட்டு பீரங்கியை பின்தொடா்ந்து சென்று துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘நாக்’ என்ற மூன்றாம் தலைமுறை ஏவுகணையின் இறுதிக்கட்ட சோதனைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் மூத்த ராணுவ அதிகாரிகளின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையில், நீண்ட தூர மற்றும் குறுகிய தூர இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணையின் திறன் பரிசோதிக்கப்பட்டது.
இந்த ஏவுகணையின் புதிய பதிப்பான ‘நாக் மாக்-2’ ஏவுகணை சோதனையும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
இதன் மூலம் இந்த ஏவுகணையின் ஒட்டுமொத்த தொகுப்பும், ராணுவ பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்வதற்கு தயாா் நிலையை எட்டியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏவுகணை சோதனை வெற்றிக்காக டிஆா்டிஓ, இந்திய ராணுவத்துக்கு பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தாா்.