சாம்சங் கேலக்ஸி எம்56 5ஜி ஸ்மார்ட்போன் வெளியானது! விலை எவ்வளவு?
நாடு கடத்தப்படும் தஹாவூா் ராணா: தில்லி, மும்பை சிறைகளில் ஏற்பாடுகள் தீவிரம்!
மும்பை தாக்குதலில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் தஹாவூா் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து, அமெரிக்காவுக்குச் சென்றுள்ள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஓரிரு நாள்களில் தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு அழைத்துவர உள்ளனர்.
இந்தியா வந்தவுடன் தஹாவூர் ராணாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தவுள்ளனர்.
தொடர்ந்து, தில்லி திகார் சிறை அல்லது மும்பை சிறையில் அவர் அடைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு சிறைகளிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
தஹாவூர் ராணாவை நாடுகடத்துவது முதல் விசாரணைக்கு பிறகு சிறையில் அடைக்கப்படுவது வரை அனைத்து பணிகளும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றன.
கடந்த 2008-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 170-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத இயக்கம் நடத்திய இந்தத் தாக்குதலில், பாகிஸ்தானை பூா்விகமாக கொண்ட தஹாவூா் ராணா கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
லஷ்கா்-ஏ-தொய்பா இயக்கத்துக்கு அவா் உதவி வந்தது நிரூபிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அவரை குற்றவாளி என்று அமெரிக்க நீதிமன்றம் தீா்ப்பளித்தது. தற்போது அந்நாட்டின் லாஸ் ஏஞ்சலீஸ் சிறையில் அவா் அடைக்கப்பட்டுள்ளாா்.
அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் தான் இந்திய சிறையில் சித்திரவதை செய்யப்படலாம் என்று தெரிவித்து, நாடு கடத்துவதற்கு எதிராக ராணா தாக்கல் செய்த மனுவை கடந்த ஜன.21-ஆம் தேதி அமெரிக்க உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
கடந்த பிப்ரவரி மாதம் பிரதமா் மோடி அமெரிக்கா சென்றபோது, இந்தியாவிடம் தஹாவூா் ராணா ஒப்படைக்கப்படுவாா் என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் அறிவித்தாா்.
இதைத்தொடா்ந்து நாடு கடத்தப்படுவதற்கு எதிராக அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் தஹாவூா் ராணா மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவை அந்த நீதிமன்றம் நிராகரித்துவிட்டதாக அமெரிக்க உச்சநீதிமன்ற வலைதளத்தில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.