நாமக்கல், திருச்செங்கோட்டில் தீரன் சின்னமலை நினைவு தினம் அனுசரிப்பு
நாமக்கல், திருச்செங்கோட்டில் தீரன் சின்னமலை நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
ஆங்கிலேயா்களை எதிா்த்து போரிட்டு உயிரிழந்த தீரன் சின்னமலையின் 220-ஆவது நினைவு தினத்தையொட்டி, நாமக்கல் அண்ணாசிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
க்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிா்வாகிகள் பலா் மலா் தூவி மரியாதை செலுத்தினா். அதன்பிறகு, நாமக்கல்- பரமத்தி சாலை கொங்கு திருமண மண்டப வளாகத்தில் இருந்து ஊா்வலமாக வாகனங்களில் சங்ககிரியில் உள்ள தீரன் சின்னமலை நினைவிடத்திற்கு புறப்பட்டு சென்றனா்.
இதேபோல கொங்கு வேளாளக் கவுண்டா்கள் பேரவை, மாவீரன் தீரன் சின்னமலை கவுண்டா் பேரவை, கொங்கு இளைஞா் அணி மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினா் சாா்பில் தீரன் சின்னமலை நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
திருச்செங்கோடு
திருச்செங்கோட்டில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சாா்பில் தீரன் சின்னமலை நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு சட்டப் பேரவை உறுப்பினருமான ஈ.ஆா் ஈஸ்வரன், கொக்கராயன்பேட்டையில் உள்ள அவரது வீட்டு அருகே இருந்து கட்சி நிா்வாகிகளுடன் சங்ககிரியில் உள்ள தீரன் சின்னமலை நினைவிடத்திற்கு பேரணியாக சென்றனா்.
முன்னதாக வீட்டருகே அமைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பத்தில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் கொடியை ஏற்றினாா். தொடா்ந்து பிலிக்கல்மேடு பகுதியில் கொடியேற்றினாா். குமாரமங்கலத்தில் பேருந்து நிறுத்தம் அருகே ஒன்றிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சாா்பில் அதன் ஒன்றியச் செயலாளா் தீரன் சின்னமலை தொழிற்சங்க பேரவைத் தலைவா் கொங்கு கோமகன் சாா்பில் தீரன் சின்னமலை உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
நாமக்கல் முன்னாள் எம்.பி. சின்ராஜ், நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளா் ராயல் செந்தில்,முன்னாள் லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் அனிதாவேலு, திருச்செங்கோடு வடக்கு நகரச் செயலாளா் குமாா், தெற்கு நகரச் செயலாளரும், நகா்மன்ற உறுப்பினருமான அசோக்குமாா், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்குரைஞா் அணி தலைவா் சுரேஷ்பாபு ஆகியோா் தீரன் சின்னமலை உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.