நாளுக்கு நாள் மோசமடையும் இந்திய வானிலை... அதிகரிக்கும் பாதிப்புகள்! - அறிக்கை சொல்வதென்ன?
பெருமழை, வெப்ப அலை, பெரும் புயல் போன்ற இயற்கையின் ஒவ்வொரு சமிக்கைகளும் மனித இனத்திற்கு வழங்கப்படும் எச்சரிக்கை ஒலியே என்பதை நாம் அனைவரும் கண்கூடாக பார்க்கும் நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளோம்.
அந்த வகையில்,துபாயில் ஓராண்டு முழுவதும் பொழிய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித்தீர்த்தது, சவுதி அரேபியாவின் வானிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக வரலாற்றில் முதன்முறையாக பாலைவனத்தில் பனிப் பொழிவு ஏற்பட்டது, இவையெல்லாம் நமக்கு இயற்கை விடுத்த எச்சரிக்கையே!
வானிலை மாற்றங்களினால் ஏற்படக்கூடிய இழப்புகளையும், அதனால் உலகம் சந்தித்து வருகிற பாதிப்புகளையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக புது டெல்லியை தலைமையிடமாக கொண்ட 'அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம்' (Centre For Science and Environment) என்கிற பொதுநல அமைப்பானது,' டவுன் டூ எர்த் (Down To Earth) என்ற இதழோடு இணைந்து, CLIMATE INDIA 2024 AN ASSESSMENT OF EXTREME WEATHER EVENTS என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, புயல்கள், கன மழை, வெள்ளம், வெப்பம் மற்றும் குளிர் அலைகள், மின்னல், நிலச்சரிவு போன்ற நிகழ்வுகளால், 2024 ஜனவரி1 முதல் செப்டம்பர் 30 வரையிலான ஒன்பது மாதங்களில் 93 சதவிகித நாள்கள்... அதாவது மொத்தம் உள்ள 274 நாள்களில் 255 நாள்கள் இந்தியாவானது தீவிர வானிலை நிகழ்வுகளை ( Extreme weather) எதிர்க்கொண்டிருக்கிறது.
தீவிர வானிலை காரணமாக ஏற்பட்ட பேரிடர்களால் இந்தியா முழுவதும் 3,238 பேர் உயிரிழந்துள்ளனர். 3.2 மில்லியன் ஹெக்டேர் பயிர் நிலங்களும், 2,35,862 வீடுகளும் சேதமடைந்துள்ளன. மேலும் 9,457 விலங்குகள் உயிரிழந்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் ஒப்பிடுகையில் 2023-ல் 235 நாள்களும், 2022 இல் 241 நாள்களும் தீவிர வானிலை பதிவாகியுள்ளது.
2022 உடன் ஒப்பிடுகையில் 2024 ஆம் ஆண்டு 18% அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்தியாவிலேயே மத்தியப் பிரதேசம் மாநிலமானது அதிகபட்சமாக 176 நாள்கள் தீவிர வானிலையை எதிர்க்கொண்டிருக்கிறது. இங்கு 353 பேர் உயிரிழந்துள்ளனர், 25,170 ஹெக்டர் பயிர் நிலங்களும், 7,278 வீடுகளும் சேதமடைந்துள்ளன. மேலும் 61 விலங்குகள் உயிரிழந்துள்ளன.
அதற்கடுத்து உத்தரப்பிரதேசத்தில் 156 நாள்களும், மகாராஷ்டிராவில் 142 நாள்களும் தீவிர வானிலை நிகழ்வுகள் பதிவாகியுள்ளது.
குறைந்தபட்சமாக டாட்ரா & நாகர் ஹவேலி மற்றும் டாமன் & டை (DNH & DD) வில் அனைத்தும் பூஜ்யமாக உள்ளது, இதனை தொடர்ந்து லட்சத்தீவில் 3 நாள்கள் தீவிர வானிலை பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை கடந்த ஒன்பது மாதங்களில் 67 நாள்கள் தீவிர வானிலையை எதிர்க்கொண்டிருக்கிறது. 25 பேர் உயிரிழந்துள்ளனர்,
1,039 ஹெக்டர் பயிர் நிலங்களும், 189 வீடுகளும் சேதமடைந்துள்ளன. மேலும் 14 விலங்குகள் உயிரிழந்துள்ளன.
சமீபத்தில் ஏற்பட்ட வயநாடு நிலச்சரிவால் பெரிதும் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தில், அதிபட்சமாக 550 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கேரளாவானது 113 நாள்கள் தீவிர வானிலையை எதிர்க்கொண்டிருக்கிறது. மேலும் 4,717 ஹெக்டர் பயிர் நிலங்களும், 4,881 வீடுகளும் சேதமடைந்துள்ளன.
142 நாள்கள் தீவிர வானிலையை எதிர்கொண்ட மகாராஷ்டிர மாநிலத்தில், இந்தியாவிலேயே அதிகப்படியாக 1,951,801 ஹெக்டர் பயிர் நிலங்கள் சேதமடைந்துள்ளன. அங்குள்ள 60 சதவீத பயிர் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் 208 மனிதர்கள் மற்றும் 166 விலங்குகளின் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன, 93 வீடுகள் சேதமடைந்துள்ளன.
60 நாள்கள் தீவிர வானிலையை எதிர்கொண்ட ஆந்திரப் பிரதேசத்தில், அதிகப்படியாக 85,806 வீடுகள் சேதமடைந்துள்ளன. இங்கு 60 மனிதர்கள் மற்றும் 501 விலங்குகளின் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும் 262,840 ஹெக்டர் பயிர் நிலங்களும் சேதமடைந்துள்ளன.
அறிக்கையில் இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், மத்திய பகுதி, தென் தீபகற்ப பகுதி, வடமேற்கு பகுதி, கிழக்கு பகுதி எனப் பிரிக்கப்பட்டுள்ளதில், மற்ற பகுதிகளை விட மத்திய பகுதியில் அதிகப்படியான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அதிகபட்சமாக 1,001 உயிரிழப்புகளும், 2.08 ஹெக்டர் பயிர் நிலங்களும் சேதமடைந்துள்ளன.மேலும் அதிகபட்சமாக 218 நாள்கள் தீவிர வானிலையை எதிர்கொண்டிருக்கிறது.
நம்முடைய தெற்கு தீபகற்ப பகுதியானது 168 நாள்கள் தீவிர வானிலையை எதிர்கொண்டிருக்கிறது. மேலும் 762 உயிரிழப்புகளும், 425.62 ஹெக்டர் நிலங்களும் சேதமடைந்துள்ளன.
இந்த 2024 ஆம் ஆண்டில், காலநிலையில் பல மோசமான சாதனைகள் படைக்கப்படுள்ளன. அதன்படி, 1901 ஆம் ஆண்டுக்கு பிறகு வரலாறு காணாத வெப்பநிலை இந்த ஆண்டு ஜனவரியில் பதிவாகியுள்ளது, மேலும் இந்தாண்டு ஜனவரியில் பதிவான வறட்சி 9வது வறட்சியாகும்.
பிப்ரவரி 2024 ல் 14.61 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது கடந்த 123 ஆண்டுகளில் பதிவான இரண்டாவது மிக உயர்ந்த வெப்பநிலையாகும். மே 2024 ல் நான்காவது மிக உயர்ந்த சராசரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. 1901 முதல் இந்தாண்டு ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் அதிகபட்ச சராசரி வெப்பநிலை பதிவாகியுள்ளது.
அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையத்தின் இயக்குநர் மற்றும் டவுன் டூ எர்த் இதழின் ஆசிரியருமான சுனிதா நரைன் பேசுகையில்,
"இத்தகைய தீவிர வானிலை, காலநிலை மாற்றத்தின் தாக்கத்தின் அறிகுறியாகும். முதலில் நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்பட்ட காலநிலை மாற்றங்கள் இப்பொழுது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படுகிறது" என்றார்.
"கடல் வெப்ப அலை மாதக் கணக்கில் தொடர்வதால் 'இனி வரும் புயல்கள் வலிமையானதாக' இருக்கும்" என்று தெரிவித்திருக்கிறார் மத்திய புவி அறிவியல் அமைச்சக செயலர் ரவிச்சந்திரன்.
அக்டோபர் மாதத்தை பொறுத்தவரையில் கடந்த 124 ஆண்டுகளில், இந்தாண்டு அக்டோபர் மாதம் தான் மிகவும் வெப்பமானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது, சுற்றுச்சூழலை கண்டிப்பாக காப்பாற்ற வேண்டிய சூழலில் இன்று நாம் இருக்கிறோம், அதை செய்ய தவறினால் பேரிடர்களுக்கு இடையில் தான் நாம் வாழ்கிற நிலை ஏற்படலாம்!