நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம்: தலைமை நீதிபதியிடம் விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு!
உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் இருந்து கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் அமைத்த விசாரணைக் குழு தனது அறிக்கையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் சமர்ப்பித்துள்ளது.
தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வர்மா பதவி வகித்தபோது, அங்கு அவர் வசித்த அதிகாரபூா்வ இல்லத்தில் கடந்த மார்ச் 14-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, அங்குள்ள அறையில் பாதி எரிந்த மூட்டைகளில், கட்டுக்கட்டாகப் பணம் இருந்தது கண்டறியப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக தில்லி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயவின் விசாரணை அறிக்கை உச்சநீதிமன்ற வலைதளத்தில் வெளியிடப்பட்டது.
அந்த அறிக்கையில், வீட்டில் கண்டறியப்பட்ட பணம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் இது தனக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட சூழ்ச்சி என்றும் நீதிபதி யஷ்வந்த் வர்மா தெரிவித்தார்.
உபாத்யாயவின் அறிக்கையைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து மேல் விசாரணைக்காக பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஷீல் நாகு, ஹிமாசல பிரதேச உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்தாவாலியா, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகியோர் அடங்கிய மூவர் குழுவை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமைத்தார்.
இந்தக் குழுவின் விசாரணை நிறைவடைந்த நிலையில், தனது அறிக்கையை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: பொறியியல் படிப்புகளுக்கு மே 7 முதல் விண்ணப்பிக்கலாம்!