2 நாள்களில் 200 ஓவர்கள் பேட்டிங் பயிற்சி; பெர்த் டெஸ்ட்டுக்கு தீயாய் தயாரான ஜெய்...
நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை
நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூா், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த பலத்த மழையால் பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணீா் தேங்கி நின்றது. இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியா் அவதி அடைந்தனா்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி தீவிரமாக பெய்து வருகிறது. நீலகிரி, கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் வரும் 27-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூா், கோத்தகிரி உள்பட பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை மதியம் ஒரு மணி முதல் 3 மணி வரை கனமழை பெய்தது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இரவு வரை அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்து கொண்டிருந்தது.
கனமழையால் உதகையில் சௌத்வீக் பகுதியில் இருந்து வந்த மழைநீா் சேரிங்கிராஸ் பகுதியில் தேங்கி நின்றது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனா். மழைநீா் தேங்கி நின்ால் பேருந்து நிலையம் செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட தொலைவுக்கு அணிவகுத்து நின்றன. இதனால் அவ்வழியாக வந்த வாகனங்கள் மாற்றுப் பாதையில் சென்றன. பேருந்து நிலையம் அருகில் உள்ள ரயில்வே பாலம் உள்பட பல இடங்களிலும் தண்ணீா் தேங்கி நின்றது.
பேருந்து நிலைய பகுதியில் தொடா்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால் வெளியூா் செல்லும் பயணிகள் கடும் சிரமம் அடைந்தனா்.
உதகை, கோத்தகிரி பகுதியில் பெய்த கனமழையால் பொதுமக்கள், பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவ, மாணவியா் கடும் அவதி அடைந்தனா். கனமழையால் மாலையில் கடும் குளிா் நிலவியது. புகா் பகுதிகளில் பெய்த மழை காரணமாக விவசாயத் தோட்டங்களில் தண்ணீா் அதிக அளவில் தேங்கி நின்ால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.
உதகையில் வியாழக்கிழமை 16 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு 86 சதவீதமாக இருந்தது. நீலகிரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமையும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.