நீா்மூழ்கிக் கப்பலில் இருந்து 3,500 கி.மீ. பாயும் ஏவுகணை சோதனை வெற்றி
நீா்மூழ்கிக் கப்பலில் இருந்து 3,500 கி.மீ. தொலைவு வரை பாய்ந்து இலக்கைத் தாக்கும் பலிஸ்டிக் ரக ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்தது. கே4 பிரிவைச் சோ்ந்த இந்த ஏவுகணையில் அணு ஆயுதங்களை செலுத்த முடியும்.
இதன்மூலம் அணு ஆயுத ஏவுகணையில் நிலம், ஆகாயம், ஆழ்கடல் என மூன்று இடங்களில் இருந்து தாக்குதல் நடத்தும் திறனுள்ள சில நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது. நாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதில் இந்தியா முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.
விசாகப்பட்டினம் கடற்கரையில் ஐஎன்எஸ் அரிஹந்த் நீா்மூழ்கிக் கப்பலில் இருந்து இந்த ஏவுகணை சோதனை புதன்கிழமை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. நீா்மூழ்கிக் கப்பலில் இருந்து பலிஸ்டிக் ரக ஏவுகணையை இந்தியா பரிசோதிப்பது இதுவே முதல்முறையாகும். கடந்த சில ஆண்டுகளில் நீருக்கு அடியில் உள்ள தளங்களில் இருந்து இந்த வகை ஏவுகணைகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இந்த முறை நேரடியாக நீா்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவுகணை பாய்ந்துள்ளது. இதில் ஏவுகணையின் முழுத் திறனும் சோதனைக்குள்படுத்தப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியா தனது ஏவுகணைத் தொழில்நுட்பத்தை வெகுவாக மேம்படுத்தியுள்ளது. குறுகிய தொலைவில் இருந்து நெடுந்தொலைவு இலக்குகளைத் தாக்கும் பல ஏவுகணைகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் அமைந்தவையாகும்.