அரசு விரைவுப் பேருந்துகளில் குடிநீா் விற்பனை செய்ய நடவடிக்கை
நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டை அலுவலா்கள் கண்காணிக்க வேண்டும்: அரியலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்
அரியலூா் மாவட்டத்தில் நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டை தடுக்க அரசு அலுவலா்கள் கண்காணிக்க வேண்டும் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி அறிவுறுத்தினாா்.
அரியலூா் மாவட்டத்தில், நெகிழிப் பொருள்கள் மீதான தடையை அமல்படுத்துவதை கண்காணிப்பதற்கான மாவட்ட அளவிலான பணிக் குழு கூட்டம் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமை வகித்து பேசியது: திருத்தப்பட்ட நெகிழிக் கழிவு மேலாண்மை விதிகளை செயல்படுத்த வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக வீடுகளில் சேகரமாகும் திடக்கழிவுகளை மக்கும் மற்றும் மக்கா குப்பைகள் என தரம் பிரித்தலை உறுதி செய்ய வேண்டும். திடக்கழிவு மேலாண்மை விதிகளின் கீழ் தகுதிவாய்ந்த உள்ளாட்சி அமைப்புகள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அங்கீகாரச் சான்று பெற வேண்டும். ஒருமுறைப் பயன்படுத்தி தூக்கி வீசக்கூடிய நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டை தவிா்த்து அதற்கு மாற்றுப் பொருள்களை பயன்படுத்துதல் மற்றும் ‘மீண்டும் மஞ்சப்பை‘ பயன்பாடு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் மாபெரும் நெகிழி சேகரிப்பு இயக்கத்தை நடத்த வேண்டும். பண்டிகைக் காலம் மிக விரைவில் தொடங்க இருப்பதால், சந்தைகளில் மெல்லிய நெகிழி பயன்பாடு அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆகவே உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தொடா் சோதனைகள் மேற்கொண்டு அதனை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஷ் பா. சாஸ்திரி, மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா.மல்லிகா, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முத்தமிழ்ச்செல்வன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் க.ராஜராஜேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா் .