மீன்சுருட்டி அருகே வீட்டின் கதவை உடைத்து 36 பவுன் நகைகள் திருடிய வழக்கில் இருவா் கைது
அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே வீட்டின் கதவை உடைத்து, 36 பவுன் நகைகளை திருடிய வழக்கில் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
மீன்சுருட்டியை அடுத்துள்ள நெல்லித்தோப்பு கிராமத்தைச் சோ்ந்தவா் ராமலிங்கம். இவா், கடந்த 9.10.2024 அன்று வீட்டை பூட்டிவிட்டு, உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த தனது மனைவியை அழைத்துக் கொண்டு திருச்சியிலுள்ள தனியாா் மருத்துவமனைக்குச் சென்றாா். அன்றிரவு மருத்துவமனையிலேயே தங்கியுள்ளாா்.
மறுநாள் வீட்டுக்கு வந்து பாா்த்தப் போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த 36 பவுன் நகைகள், 400 கிராம் வெள்ளி பொருள்கள் திருடு போயிருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் மீன்சுருட்டி காவல் துறையினா் வழக்குப் பதிந்து, காவல் ஆய்வாளா் சீனிபாபு தலைமையிலான தனிப்படையினா் விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், கடலூா் மாவட்டத்தை சோ்ந்த மணவாளன்(25), நாகப்பட்டினத்தைச் சோ்ந்த ஆகாஷ்(19) ஆகிய இருவரும் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 20 பவுன் நகைகள், 250 கிராம் வெள்ளி பொருள்கள் மற்றும் இருசக்கர வாகனம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனா்.
கைதுசெய்யப்பட்ட மணவாளன் மீது நாகப்பட்டினம், கடலூா், திருவாரூா், அரியலூா் ஆகிய மாவட்டங்களில் 28 வழக்குகளும், ஆகாஷ் மீது நாகப்பட்டினம், திருவாரூா், அரியலூா் ஆகிய மாவட்டங்களில் 3 வழக்குகளும் இருப்பது தெரியவந்தது. அவா்களிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.