``எனக்காக இவர்கள் நோபல் பரிசு கேட்கிறார்கள்; ஆனால், நான் விரும்பும் பரிசு இதுதான...
``புல்டோசர் நடவடிக்கைக்கெதிராக நான் அளித்த தீர்ப்பு எனக்கு மன நிறைவானது'' - CJI பி.ஆர்.கவாய்
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 2017-ல் ஆரம்பித்த புல்டோசர் நடவடிக்கை மெல்ல மெல்ல மத்தியப்பிரதேசம், ஹரியானா என பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கும் பரவியது.
பெண்களுக்கெதிரான குற்றங்களைச் செய்வோர், குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள், கேங்ஸ்டர்களின் வீடுகள், கட்டிடங்கள் ஆகியவற்றைப் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான நீதி வழங்குகிறோம் என்ற பெயரில் புல்டோசர்களைக் கொண்டு இடித்தது பா.ஜ.க அரசு.
ராம நவமி, ஹனுமன் ஜெயந்தி போன்ற இந்துப் பண்டிகையின்போது ஏற்படும் கலவரத்தில் ஒருபிரிவினரின் வீடுகள், கடைகள் இடிக்கப்பட்டன.

ஒவ்வொரு முறை புல்டோசர் நடவடிக்கை அரங்கேறும்போதும், ஒருவர் குற்றவாளியாக இருந்தாலும் அவரைத் தண்டிப்பது நீதிமன்றத்தின் வேலை.
அதுமட்டுமல்லாமல் ஒருவர் செய்த குற்றத்துக்கு அவரின் வீட்டை இடித்து ஒரு குடும்பத்தையே வீதிக்கு கொண்டுவருவது என்பது முற்றிலும் அநீதி எனக் கண்டனக் குரல்கள் எழுந்தன.
நீதிமன்றத்தில் மனுக்களும் குவிந்தன. அவையனைத்தையும் ஒன்றாக விசாரித்த நீதிபதிகள் பி.ஆர். கவாய், கே.வி. விஸ்வநாதன் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு கடந்த ஆண்டு நவம்பரில் அதிரடித் தீர்ப்பு வழங்கி புல்டோசர் நடவடிக்கையைத் தடுத்தது.
இந்த நிலையில், அன்று அத்தகைய தீர்ப்பளித்த நீதிபதிகளில் ஒருவராக இருந்த தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், புல்டோசர் நடவடிக்கைக்கு எதிராகத் தான் தீர்ப்பானது தனக்கு மிகுந்த மனநிறைவைக் கொடுத்த தீர்ப்புகளில் ஒன்று எனக் கூறியிருக்கிறார்.
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களின் அகாடமிக் குழு செப்டம்பர் 19-ம் தேதி நடத்திய நிகழ்ச்சியில் இது குறித்துப் பேசிய பி.ஆர். கவாய், "எங்கள் இருவருக்கும் (நீதிபதி கே.வி. விஸ்வநாதன்) மிகுந்த திருப்தியை அளித்த தீர்ப்புகளில் ஒன்று, புல்டோசர் நடவடிக்கைக்கு எதிரான தீர்ப்பு.

தீர்ப்பின் ஆன்மாவானது மனிதன் எதிர்கொள்ளும் பிரச்னை. குற்றவாளி அல்லது குற்றம்சாட்டப்பட்டவர் குடும்ப உறுப்பினர்களின் ஒருவராக இருப்பதால் அந்தக் குடும்பமே துன்புறுத்தப்படுகிறது.
இந்தத் தீர்ப்பின் பெருமை முழுமையாக எனக்கு வந்தாலும், தீர்ப்பை எழுதியதில் சமமான பெருமை நீதிபதி விஸ்வநாதனுக்கும் சேர வேண்டும்" என்று கூறினார்.
ஆறு மாதங்களாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சிறப்பாகச் செயல்பட்டுவரும் பி.ஆர். கவாய் அடுத்த மாதம் ஓய்வுபெறவிருக்கிறார்.
புல்டோசர் நடவடிக்கைக்கெதிரான தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்!
* அதிகாரி ஒருவரைக் குற்றவாளி எனத் தீர்மானிக்க முடியாது.
* குற்றவாளியாக இருந்தாலும், சட்டத்தால் பரிந்துரைக்கப்பட்ட முறையான நடைமுறையைப் பின்பற்றாமல் இடிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது.

* குற்றம் சுமத்தப்பட்டவர்களின் வீடு அல்லது கடைகளைத் தான்தோன்றித்தனமாக அதிகாரிகள் புல்டோசர் கொண்டு இடித்தால், அது சட்டமீறலாகவும், நீதிமன்ற அவமதிப்பாகவும் கருதப்பட்டு, அபராதத் தொகையை அவர்கள் சம்பளத்திலிருந்து பிடித்து, வீட்டை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்.
இவற்றுடன் வழிகாட்டுதல்களையும் உச்ச நீதிமன்றம் வழங்கியிருந்தது.