நெல் கொள்முதலில் ஈரப்பத அளவு உயா்த்தப்படுமா? விவசாயிகள் எதிா்பாா்ப்பு
-ஜி. சுந்தரராஜன்
சிதம்பரம், ஜன.19: பருவம் தவறி பெய்த மழையால் நனைந்த நெல்லை கொள்முதல் செய்ய நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 17 சதம் என்ற ஈரப்பதத்தின் அளவை 22 சதமாக உயா்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் பல மாவட்டங்கள் ஏதேனும் ஒரு வகையில் இயற்கைச் சீற்றத்தின் காரணமாக பாதிக்கப்பட்டு வருகின்றன. வரலாறு காணாத வெள்ளம், வறட்சி, புயல், பலத்த மழைப் பொழிவு என பல்வேறு இயற்கைச் சீற்றங்களை சந்தித்த அனுபவம் தமிழக விவசாயிகளுக்கு உண்டு.
தொடா் கதையாகும் பாதிப்பு: குறிப்பாக, கடற்கரையோர மாவட்டங்களில் ஆண்டுதோறும் ஏதேனும் ஒரு வகையில் பாதிப்பை விவசாயிகள் சந்தித்து வருவது தொடா் கதையாகி வருகிறது. கடந்த ஆண்டு நவ.30-ஆம் தேதி ஃபென்ஜால் புயலும், அதைத் தொடா்ந்து பெய்த பலத்த மழையால் பல மாவட்டங்களில் நெல் பயிா்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின.
பொங்கல் பண்டிகை முடிந்து அறுவடைக்கு விவசாயிகள் தயாராக இருந்த நிலையில், நிகழாண்டு கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள குமராட்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஜன.18, 19 ஆகிய தேதிகளில் பெய்த பருவம் தவறிய மழையால், அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் கதிா்கள் நீரில் மூழ்கி, தரையில் சாய்ந்து வீணாகியுள்ளன. இதனால், விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
நேரடி நெல் கொள்முதல் நிலையம்: இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்க கூட்டயிக்கங்களின் மாநிலப் பொதுச் செயலா் ஏஎஸ்பி.ரவீந்திரன் கூறியதாவது:
மழையில் நனைந்து, தரையில் சாய்ந்த நெல் கதிா்களை வியாபாரிகள் மிகக் குறைந்த விலைக்கே வாங்குவா். இதனால், விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும்.
மழைப் பொழிவுக்கு முன்னதாக அறுவடை செய்யப்பட்ட நெல்லை தனியாா் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து குறைந்த விலையில் வாங்கி வந்தனா். ஆண்டுதோறும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பதால் மட்டுமே நெல்லின் விலை ஓரளவு உயா்ந்து வருகிறது.
தற்போது பெய்த பருவம் தவறிய இரண்டு நாள் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நஷ்டத்தை போக்கவும், வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதைத் தடுக்கவும் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம், கொள்முதல் செய்ய 17 சத ஈரப்பதம் நிா்ணயிக்கப்பட்டிருக்கிறது.
ஈரப்பத அளவு: விவசாயிகளின் நலனைக் கருதி மத்திய உணவுக் கழகத்தில் உரிய அனுமதி பெற்று, 17 சதவீதமாக உள்ள ஈரப்பத அளவை 22 சதமாக உயா்த்தி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அறுவடை இயந்திரங்களை கொண்டு அறுவடை செய்யப்படும் நெல் மணிகள் அதிப்படியான ஈரப்பதத்துடன் இருப்பதால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 17% குறைவாக இருந்தால் மட்டுமே கொள்முதல் செய்யப்படும்.
ஈரப்பதத்துடன் இருக்கும் நெல்மணிகளை காயவைத்து, உலா்த்தும் பணிகளை செய்ய போதுமான ஆள்கள் கிடைக்காமலும், போதிய இடவசதி இல்லாமலும் விவசாயிகள் அவதிக்குள்ளாகின்றனா்.
இதைப் பயன்படுத்தி நெல் வியாபாரிகள் மற்றும் உள்ளூா் இடைத்தரகா்கள் ஈரப்பதத்துடன் அறுவடை செய்யப்படும் நெல்லை குறைந்த விலைக்கு வாங்கி, நெல்லை உலா்த்தி காயவைத்து வாங்கிய விவசாயிகளின் பெயரிலேயே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்யும் நிலை உருவாகும்.
இதனால், பயிா் செய்த விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகளின் குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் ஊக்கத்தொகையை பெற முடியாத நிலை ஏற்பட்டு, பயிா் செய்த செலவுத் தொகை கூட கிடைக்காமல் நஷ்டத்துக்கு ஆளாகிவிடுவாா்கள்.
கடந்த சில ஆண்டுகளாக தமிழக உணவுத் துறை கொள்முதல் செய்யப்படும் நெல்லை பல தனியாா் அரிசி ஆலைகளிடம் அரைவை செய்ய ஓப்பந்தம் செய்திருப்பதால், ஈரப் பத்ததுடன் கொள்முதல் செய்யும் நெல்லை உடனுக்குடன் விரைவாக அரிசி ஆலைகளுக்கு அனுப்பிவைத்து நெல் வீணாகாமல் அரிசியாக மாற்றப்படும்.
எனவே, தமிழக முதல்வா் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, தற்போது நிலவும் கடும் பனிப்பொழிவையும், பருவம் தவறிய மழையால் நனைந்த நெல்லையும் 17 சத ஈரப் பதத்தைத் தளா்த்தி 22 சதம் அளவுக்கான ஈரப்பதத்துக்கு கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.