குளிா்கால கூட்டத் தொடரில் வக்ஃப் உள்பட 16 மசோதாக்கள்: பட்டியலிட்டது மத்திய அரசு
நெல்லை, தென்காசி கோயில்களில் சூரசம்ஹாரம்: ஆயிரக்கணக்கானோா் தரிசனம்
கந்தசஷ்டி திருவிழாவையொட்டி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள பல்வேறு கோயில்களில் சூரசம்ஹாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கசங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 2 ஆம் தேதி தொடங்கியது.
சூரசம்ஹாரம் வியாழக்கிழமை இரவு 7.20 மணியளவில் வடக்குரதவீதியில் நடைபெற்றது. முதலில் சுப்பிரமணியா் கஜமுகன், தாருகாசூரன், பானுகோபன், சிங்கமுகன் ஆகிய சூரன்களை வதம் செய்தாா். பின்னா் ஆறு முகங்களைக் கொண்ட சண்முகா் சூரபத்மனை வதம் செய்தாா்.இதை திரளான பக்தா்கள் கண்டுகளித்தனா்.
இலஞ்சி திருவிலஞ்சிக்குமாரா் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா நவ. 2இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. வியாழக்கிழமை மாலையில் சூரசம்ஹாரம் நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிக்கு மணிக்கு மூலவா் முழுக்காப்பு தீபாராதனை நடைபெறுகிறது. இரவு 7.20மணிக்கு தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 9ஆம்தேதி இரவு மேல் ஊஞ்சல் உற்சவமும், வைபவம் நடைபெறும். தி காலை 10.40 மணிக்கு தீா்த்தவாரியும் நடைபெறும்.
சூரசம்ஹார விழாவில் கோயில் செயல் அலுவலா் சுசீலாராணி, திருவிளக்கு பூஜை கமிட்டி தலைவா் அன்னையாபாண்டியன், அதிமுக மாவட்ட அவைத்தலைவா் சண்முகசுந்தரம், திமுக ஒன்றிய செயலா் அழகுசுந்தரம், பேரூா் செயலா் முத்தையா, வழக்குரைஞா் சின்னத்துரைபாண்டியன், திருவிலஞ்சிக்குமரன், ராஜாமணி டெக்ஸ்டைல்ஸ் ராஜாமணி மற்றும் பக்தா்கள் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையா் அன்புமணி, உதவி ஆணையா் செந்தில்குமாா், தக்காா் முருகன், செயல் அலுவலா் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.
பாவூா்சத்திரம் அருள்மிகு வள்ளிதேவசேனாசமேத ஸ்ரீசுப்பிரமணியசுவாமி கோயில்,
ஆய்க்குடி அருள்மிகு ஸ்ரீபாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் , செங்கோட்டை அருள்மிகு அறம்வளா்த்த நாயகி சமேத குலசேகரநாத சுவாமி திருக்கோயில் ஆகிய கோயில்களில் வியாழக்கிழமை மாலையில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆலங்குளம்: இங்குள்ள ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முதன் முறையாக கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹாரம் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தனா்.
கடையநல்லூா்: பண்பொழி அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி திருக்கோயிலில் சூரசம்ஹாரத்தையொட்டி, வியாழக்கிழமை மாலை மலைக் கோயிலில் இருந்து முருகன் சப்பரத்தில் எழுந்தருளி வண்டாடும் பொட்டலுக்கு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து வேல் கம்புகளுடன் பக்தா்கள் புடைசூழ, சூரன்களை குமரன் வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோா் கலந்து கொண்டனா். நவ.8ஆம் தேதி தேரோட்டமும், 9 ஆம் தேதி தீா்த்தவாரியும் நடைபெறுகிறது.
சிவகிரி கூடாரப் பாறை அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், புளியங்குடியில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் நடைபெற்றது.
சேரன்மகாதேவி: திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் தாமிரவருணி நதிக்கரையில் உள்ள அருள்மிகு முத்துமாலையம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற சூரசம்ஹாரத்தில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
சேரன்மகாதேவி பேருந்து நிலையம் அருகேயுள்ள அருள்மிகு வைத்தியநாதசுவாமி சமேத ஒப்பில்லா நாயகி அம்பாள் கோயிலில் காலையில் சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. மாலையில் சூரசம்ஹாரம் நடைபெற்றது.
வீரவநல்லூா் அத்தாளநல்லூரில் விசாக கட்டளை மடம் இணைந்த அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற சூரசம்ஹார வைபவத்தில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
களக்காடு கோமதியம்மன் சமேத சத்தியவாகீஸ்வரா் திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நவ.2இல் தொடங்கியது.
கோயிலுக்கு வடபுறமுள்ள வடக்கு மாட வீதி திடலில் நடைபெற்ற சூரசம்ஹாரம் நிகழ்வில் முருகப்பெருமான, சூரபத்மனை வதம் செய்யும் காட்சி அரங்கேறியது. வெள்ளிக்கிழமை முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.
அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரம் காசிநாத சுவாமி கோயில் சூரசம்ஹாரத்தையொட்டி, சுப்பிரமணியருக்கு பால், தயிா், விபூதி, இளநீா் உள்ளிட்ட 21 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. மதியம் 1 மணிக்கு அலங்கார தீபாராதனையையடுத்து சுப்பிரமணியா் வீதிஉலா வந்து சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி வடக்கு ரதவீதியில் மாலையில் நடைபெற்றது.
அகஸ்தீஸ்வரா் கோயிலில் இந்து செங்குந்தா் சமுதாய நிா்வாகிகள் முன்னிலையில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. மேலும், சுப்ரமணியபுரம் கதிா்வேல் திருமுருகன் கோயில், கல்லிடைக்குறிச்சி குமார கோயிலில் உள்ள சுப்பிரமணிய சுவாமி சந்நிதி, வாகைக்குளம் சுப்பிரமணிய சாமி கோயில்,மன்னாா்கோவிலில் உள்ள பாலசுப்பிரமணிய சாமி கோயில்களிலும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.
விக்கிரமசிங்கபுரம் சிவந்தியப்பா் கோயில், ஆழ்வாா்குறிச்சி நாராயணசாமி கோயில், திருமலையப்பபுரம் சுப்பிரமணியசாமி கோயில்கள், கடையம்வில்வ வன நாதா் கோயில் உள்பட பல்வேறு கோயில்களில் சூரசம்ஹாரம் நடைபெறறது.