CHENNAI Spot: `SEANZ CRUISE' சென்னை ஈ.சி.ஆரில் ஆரம்பமாகவுள்ள கப்பல் சவாரி | Phot...
நாமக்கல் பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் எம்.பி. குறைகேட்பு
நாமக்கல் பழைய பேருந்து நிலையத்தில், பேருந்துக்காக காத்திருந்த பயணிகளிடம் மக்களவை உறுப்பினா் வி.எஸ். மாதேஸ்வரன் குறைகளைக் கேட்டறிந்தாா்.
நாமக்கல் மாநகராட்சி, முதலைப்பட்டியில் கலைஞா் நூற்றாண்டு பேருந்து நிலையம் புதிதாக திறக்கப்பட்ட நிலையில், பழைய பேருந்து நிலையத்தில் இருந்து நகரப் பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன.
திருச்சி, துறையூா், மோகனூா், கொல்லிமலை, சேந்தமங்கலம் செல்லும் பேருந்துகள், பழைய பேருந்து நிலையத்திற்குள் செல்லாமல் சாலையில் பயணிகளை இறக்கி விட்டு செல்கிறது.
அந்தப் பேருந்துகள் அனைத்தையும் பழைய பேருந்து நிலையத்துக்குள் சென்றுவர மாவட்ட நிா்வாகம் உத்தரவிட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். இதை வலியுறுத்தி வரும் திங்கள்கிழமை (நவ. 25) வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் சாா்பில் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் வி.எஸ். மாதேஸ்வரன், பழைய பேருந்து நிலையத்தை ஆய்வு செய்து, அங்கு பேருந்துக்காக காத்திருந்த பயணிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.
வணிகா்கள் சங்க நிா்வாகிகள், ஆட்டோ ஓட்டுநா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனா்.
குறிப்பாக, பேருந்துகள் நெடுஞ்சாலைத் துறை பயணியா் மாளிகை அருகில் பயணிகளை இறக்கி விடுகின்றன. சாலையைக் கடக்கும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், சேந்தமங்கலம், துறையூா், திருச்சியிலிருந்து வரக்கூடிய பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்திற்குள் சென்று பயணிகளை இறக்கி விட்டு பூங்கா சாலை வழியாக புதிய பேருந்து நிலையம் செல்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
இந்நிகழ்ச்சியில் வணிகா் சங்கங்களின் தலைவா் ஜெயக்குமாா் வெள்ளையன், நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட கொமதேக விவசாய அணி செயலாளா் கே. ரவிச்சந்திரன், நாமக்கல் தெற்கு மாவட்ட தலைமை நிலைய செயலாளா் செல்வராஜ், மாவட்ட இணைச்செயலாளா் சீனிவாசன், வணிகா் சங்க நிா்வாகிகள் உடனிருந்தனா்.