மதுரை மடீட்சியா அரங்கில் இன்று முன்னாள் படை வீரா்கள் குறைதீா் முகாம்
வருமானவரித் துறை அலுவலகங்களில் 5.49 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவை
நாடு முழுவதும், வருமான வரித்துறை அலுவலகங்களில், வரி பிரச்னை தொடா்பாக 5.49 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் உள்ளதாக ஈரோடு மண்டல வருமான வரித்துறை இணை ஆணையா் எஸ்.ஸ்ரீனிவாஸ் கண்ணா தெரிவித்தாா்.
நாமக்கல்லில், வருமான வரி செலுத்துவோா் பங்கேற்ற விழிப்புணா்வு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட பட்டயக் கணக்காளா்கள் (ஆடிட்டா்கள்) சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில், மத்திய அரசின் நிதித் துறை அறிமுகப்படுத்திய நேரடி வரி ‘விவாத் சே விஸ்வாஸ்’ என்ற திட்டம்- 2024 குறித்து, வருமான வரித்துறையின் ஈரோடு மண்டல இணை ஆணையா் எஸ். ஸ்ரீனிவாஸ் கண்ணா விளக்கம் அளித்துப் பேசியதாவது:
வருமான வரித் துறையில் நிலுவையில் உள்ள வருமான வரி வழக்குகள் தொடா்பான சா்ச்சைகளைத் தீா்க்க ‘விவாத் சே விஸ்வாஸ்’ திட்டம்- 2024 உருவாக்கப்பட்டுள்ளது. சட்டப்பூா்வ சா்ச்சைகளைத் தீா்ப்பதன் மூலம், வரி செலுத்துவோருக்கு மன அமைதியை அளிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
இத்திட்டம் கடந்த மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் முழு பயனை அடைய வேண்டுமென்றால், டிச. 31-க்குள் வருமான வரியை கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும். வீடு, அலுவலகங்களில் வருமானவரித் துறை சோதனை நடத்தப்பட்டவா்களுக்கு இந்தத் திட்டம் பொருந்தாது.
வருமான வரி தாக்கல் செய்தபோது, உண்மையான வருமானத்தை மறைத்து இருந்தால், தற்போது இந்தத் திட்டத்தை பயன்படுத்தி 25 சதவீத அபராத தொகையுடன் வரியை செலுத்த வாய்ப்பு உள்ளது. மதிப்பிடப்பட்ட வரி செலுத்தி இருந்தால் வட்டியும், அபராத தொகையும் செலுத்த வேண்டாம் என்பது இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமாகும்.
வருமான வரி தொடா்பான மேல்முறையீடுகளை 2020, ஜன.31-ஆம் தேதிக்குள் முடித்திருந்தால், இந்தத் திட்டத்தின் கீழ் பழைய நடைமுறைப்படி 10 சதவீதம் கூடுதல் வரி செலுத்திட வேண்டியது வரும். அபராத தொகை என்றால் 5 சதவீதம் செலுத்த வேண்டும். முன்னதாக வரியைச் செலுத்தியிருந்தால் அவற்றை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.
அகில இந்திய அளவில் 2024, ஏப். 1-ம் தேதி நிலவரப்படி, வருமான வரி தொடா்பாக 5.49 லட்சம் மேல் முறையீட்டு மனுக்கள் நிலுவையில் உள்ளன.
ஊதியம் பெறுவோரைப் பொறுத்தவரை, வருமான வரி படிவம் தாக்கல் செய்தபோது, உரிய ஆவணங்களின்றி வரி விலக்கு பெற்றிருந்தால், திருத்திய வருமான வரி படிவம் வரி விதிப்பாண்டு 2024-25 இன் கீழ், ‘விவாத் சே விஸ்வாஸ்’ திட்டம் வாயிலாக, வரும் டிச. 31க்குள் தாக்கல் செய்தால், அபராதம் விதிக்கப்பட மாட்டாது என்றாா்.
நிகழ்ச்சியில், ஈரோடு மண்டல துணை ஆணையா் மணிகண்டன், நாமக்கல் மாவட்ட வருமான வரி அலுவலா்கள் அப்துல் ரஷீத், கமலக்கண்ணன், பால் வண்ணன், பிரபு, மாவட்ட பட்டயக் கணக்காளா்கள் சங்கத் தலைவா் ஜெ. வெங்கடசுப்பிரமணியன், செயலாளா் எம். செல்வராஜூ, மாவட்ட சிறு, குறு தொழில்கள் சங்க தலைவா் கோஸ்டல் என்.இளங்கோ, பட்டயக் கணக்காளா்கள் பலா் கலந்து கொண்டனா்.