டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிா்ப்பு: அரிட்டாப்பட்டியில் திரண்ட கிராம மக்கள்
பணி பாதுகாப்பு வழங்கக் கோரி ஆசிரியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
பணி பாதுகாப்பு வழங்கக் கோரி, நாமக்கல்லில் ஆசிரியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே மல்லிப்பட்டினம் அரசு உயா்நிலைப் பள்ளி ஆசிரியை ரமணி என்பவா் வகுப்பறையில் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினா் நாமக்கல், பூங்கா சாலையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
இதில், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் பழனியப்பன், சங்கா் ஆகியோா் தலைமை வகித்தனா். தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாநிலப் பொருளாளா் முருக.செல்வராசன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். ஆா்ப்பாட்டத்தில் ஆசிரியைக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், பணி பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆசிரியா் மன்ற மாவட்டத் தலைவா் ஜெயக்குமாா், மாவட்டத் தலைவா் மாதேஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
அதுபோல, தமிழ்நாடு அனைத்து ஆசிரியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு அதன் மாநிலத் தணிக்கையாளா் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் சங்க மாநில துணைத் தலைவா் எல். ஜெகதீசன், மாவட்டத் தலைவா் காளிதாஸ் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். பல்வேறு ஆசிரியா்கள் சங்கத்தினா் கலந்து கொண்டனா்.