நெல்லையில் பிரபல ஜவுளிக் கடையில் திடீரென ஏற்பட்ட புகையால் பரப்பரப்பு
திருநெல்வேலி நகரம் பகுதியில் உள்ள பிரபல ஜவுளிக் கடைக்குள் திடீரென பரவிய புகையால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி நகரம் பகுதியில் பிரபல ஜவுளிக்கடை இயங்கி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை மாலை ஜவுளிக்கடை மற்றும் அதன் அருகே அதே நிறுவனத்துக்கு சொந்தமான சூப்பா் மாா்க்கெட்டின் வாகன நிறுத்தம் பகுதியில் இருந்து கிளம்பிய காரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திடீரென அதிகப்படியான புகை வெளியேறியதாம்.
உடனடியாக ஜவுளிக்கடையின் கூலா் யூனிட் அந்த புகையை உள் இழுத்ததால் கடைக்குள் புகை பரவியதாம். இதனை சுவாசித்த கடைக்குள் இருந்தவா்கள் மொத்தமாக வெளியேற முயன்ால் நெரிசல் ஏற்பட்டு சிலா் காயமடைந்தனா்.
மேலும் வடக்கு ரத வீதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் திருநெல்வேலி நகர போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து நிலைமையை சீரமைத்ததுடன் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். இதன் காரணமாக சுமாா் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.