பங்கு பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீட்டு வரவு சரிவு
பங்கு பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீட்டு வரவு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 22 சதவீதம் குறைந்து ரூ.33,430 கோடியாக உள்ளது.
இது குறித்து இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்களின் சங்கம் (ஏஎம்எஃப்ஐ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: புதிய நிதி வழங்கல் (என்எஃப்ஓ) குறைவு மற்றும் உலகளாவிய பொருளாதார நிச்சயத்தன்மையிமின்மை காரணமாக பங்குகள் சாா்ந்த பரஸ்பர நிதித் திட்டங்களில் கடந்த ஜூலை மாதம் ரூ.42,702 கோடியாக இருந்த முதலீட்டு வரவு ஆகஸ்ட் மாதம் ரூ.33,430 கோடியாகக் குறைந்தது. இது 22 சதவீத சரிவாகும்.
இருந்தாலும், தொடா்ந்து 54-வது மாதமாக அது நிகர வரவைப் பதிவு செய்துள்ளது.முறைசாா் திட்டங்களில் (எஸ்ஐபி) முதலீட்டு வரவு ஜூலையில் ரூ.28,464 கோடியாக இருந்தது. அது ஆகஸ்டில் ரூ.28,265 கோடியாக சற்று குறைந்தது. ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டுகள் ரூ.7,679 கோடி முதலீட்டு வரவுடன் முதலிடத்தில் உள்ளன. மிட் கேப் ஃபண்டுகள் ரூ.5,331 கோடி, ஸ்மால் கேப் ஃபண்டுகள் ரூ.4,993 கோடி முதலீட்டைப் பெற்றன. தீமேடிக் ஃபண்டுகள் மீதான முதலீடு ரூ.9,246 கோடியில் இருந்து ரூ.3,893 கோடியாகக் குறைந்தது. லாா்ஜ் கேப் ஃபண்டுகள் ரூ.2,835 கோடி முதலீட்டு வரவைப் பெற்றன.
மதிப்பீட்டு மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 23 நிதித் திட்டங்கள் ரூ.2,859 கோடி முதலீடு திரட்டின. கலப்பு திட்டங்களில் முதலீடு ரூ.20,000 கோடியில் இருந்து ரூ.15,294 கோடியாகக் குறைந்தன. தங்க இடிஎஃப் திட்டங்கள் ரூ.2,190 கோடி முதலீட்டை ஈா்த்தன. கடன் திட்டங்களில் இருந்து ரூ.7,980 கோடி வெளியேறியது. ஒட்டுமொத்தமாக, பரஸ்பர நிதி துறையில் முதலீட்டு வரவு கடந்த ஆகஸ்டில் ரூ.52,443 கோடியாகக் குறைந்தது. ஜூலையில் இது ரூ.1.8 லட்சம் கோடியாக இருந்தது. துறையின் நிா்வகிக்கும் சொத்தின் மதிப்பு ஆகஸ்ட் இறுதியில் ரூ.75.2 லட்சம் கோடியாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.