செருதூர் மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்!
திருக்குவளை: வேதாரண்யம் அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த செருதூர் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்கொள்ளையர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு தாக்கியுள்ளனர்.
மேலும், மீனவர்களிடம் இருந்து ரூ. 9 லட்சம் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்களை பறிச் சென்றனர். காயமடைந்த 7 மீனவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த செருதூர் மீனவ கிராமத்திலிருந்து 50 -க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் கடந்த 11 ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்றனர்.
இவர்களில், முருகையன், செல்வகுமார், வெண்ணிலா ஆகிய மூவருக்கு சொந்தமான பைபர் படகில் தனித்தனியே மீன் பிடிக்க சென்ற 12 மீனவர்கள் வேதாரண்யத்தில் இருந்து தென்கிழக்கே சுமார் 15 கடல் மைல் நாட்டிக்கல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த தமிழ் பேசும் இலங்கை கடற்கொள்ளையர்கள், கத்தியைக் காட்டி மிரட்டி மீனவர்களிடமிருந்து மொபைல் போன்கள், வெள்ளி ஆபரணங்கள், ஜிபிஎஸ், என்ஜின், மீன்பிடி வலைகள், மீன்கள் உள்ளிட்ட ரூ. 9 லட்சம் மதிப்பிலான மீன்பிடி உபகரணப் பொருள்களை பறித்துச் சென்றுள்ளனர்.
இந்த தாக்குதலில் மூன்று படகில் இருந்த 12 மீனவர்களில் தமிழழகன் கையில் மூட்டு இறங்கி நிலையிலும் பாலகிருஷ்ணன், இடும்பன், கணேசன் உள்ளிட்ட 7 பேர் காயமடைந்தனர்.

இதையடுத்து கரை திருப்பி 12 மீனவர்களில் 7 பேர் ஆம்புலன்ஸ் மூலம் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இலங்கை கடற்கொள்ளையர்களின் தொடர் தாக்குதலால் செருதூர் மீனவர்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். இனிவரும் காலங்களில் இந்த சம்பவம் நடக்காமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.