பிரதமர் மோடியின் தாயார் குறித்த ஏஐ விடியோவால் சர்ச்சை! காங்கிரஸுக்கு பாஜக கண்டனம...
பிசிசிஐ-யின் அடுத்த தலைவரா? சச்சின் டெண்டுல்கர் விளக்கம்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், பிசிசிஐ-யின் புதிய தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக வெளியான தகவல் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்(பிசிசிஐ) தலைவராக இருந்த ரோஜர் பின்னி, தன்னுடைய 70 வயதை எட்டியதையடுத்து தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
2022 ஆம் ஆண்டில் தலைவராக நியமிக்கப்பட்ட ரோஜர் பின்னி, பிசிசிஐ சட்டவிதிகளின்படி, 70 வயதைக் கடந்தவர் பதவியில் தொடர முடியாது என்பதால் இந்த முடிவை எடுத்திருந்தார்.
இதற்கிடையே அடுத்த பிசிசிஐ தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் உச்ச நட்சத்திரமாக இருந்த முன்னாள் வீரர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதில், சௌரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், இதனை முற்றிலுமாக மறுத்திருக்கும் சச்சின் டெண்டுல்கர் இதுதொடர்பாக அவருடைய எஸ்ஆர்டி ஸ்போர்ட்ஸ் மேலாண்மை நிறுவனம் சார்பில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “பிசிசிஐ-யின் தலைவர் பதவிக்கு சச்சின் டெண்டுல்கரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகப் பரவிவரும் செய்திகளும், வதந்திகளும் எங்கள் கவனத்துக்கு வந்துள்ளன.
இதுபோன்ற ஆதாரமற்ற ஊகங்களையும், வதந்திகளையும் நம்பவேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் வருகிற 28 ஆம் தேதி பிசிசிஐ-யின் ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.