செப். 16ல் சென்னையில் பாஜகவின் முக்கிய ஆலோசனை கூட்டம்!
சென்னையில் பாஜக மையக்குழு கூட்டம் வருகிற செப். 16 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியில் தொடர்ந்து குழப்பங்கள் நீடித்து வருகின்றன. முதலில் ஆட்சியில் பங்கு குறித்து இரு தரப்பினரும் பேசி வந்த நிலையில் சமீபத்தில் கூட்டணியில் இருந்து ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் விலகினர்.
ஓபிஎஸ் - நயினார் நாகேந்திரன் இடையே கருத்து வேறுபாடு, எடப்பாடி பழனிசாமி - செங்கோட்டையன் இடையேயான கருத்து மோதல்கள் என கூட்டணியில் பல சிக்கல்கள் நிலவுகின்றன.
இரு நாள்களுக்கு முன்பு செங்கோட்டையன், தில்லியில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமனைச் சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில் பாஜகவின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் அமைப்புச் செயலாளர் பி.எல். சந்தோஷ் தலைமையில் வருகிற செப். 16 அன்று நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் கூட்டணி விவகாரங்கள், தேர்தல் வியூகம், தலைவர்கள் இடையே கருத்து வேறுபாடு, மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
BJP Central Committee meeting in Chennai is scheduled to be held on September 16.
இதையும் படிக்க |செப். 17 முதல் உழவன், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாம்பரத்தில் இருந்து புறப்படும்!