பிரதமர் மோடியின் தாயார் குறித்த ஏஐ விடியோவால் சர்ச்சை! காங்கிரஸுக்கு பாஜக கண்டனம...
'சதிவேலை' வழக்கில் முன்னாள் அதிபர் போல்சனாரோவிற்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை - கொதிக்கும் அமெரிக்கா!
பிரேசில் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவிற்கு அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் 27 ஆண்டுகளுக்குச் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
2022-ம் ஆண்டு, பிரேசில் அதிபராக லூலா தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது, தான் அதிபர் பதவியிலேயே தொடர வேண்டும் என்ற ஆசையில், போல்சனாரோ சதிவேலையில் ஈடுபட்டார்.
அந்த வழக்கில் தான் தற்போது போல்சனாரோவிற்கு சிறைத் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.

என்னென்ன சதிவேலைகள்?
2022-ம் ஆண்டு நடந்த தேர்தல் பரவலாக சந்தேகத்தைக் கிளப்பியது, தனது ஆதரவாளர்களைத் தூண்டிவிட்டது, ராணுவக் கிளர்ச்சியைக் கிளப்ப முயற்சி செய்தது போன்றவை அவர் செய்த சதிவேலை குற்றச்சாட்டுகள் அடங்கும்.
மறுக்கும் போல்சனாரோ
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை போல்சனாரோ தொடர்ந்து மறுத்து வருகிறார்.
தற்போது அவர் சிறையில் அடைக்கப்படவில்லை. பிரேசிலியாவில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தத் தீர்ப்பை அடுத்த 60 நாள்களுக்குள் அதிகாரப்பூர்வமாக உச்ச நீதிமன்றம் வெளியிடும். அவர் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு வேண்டுமானாலும் செய்யலாம்.
ஆனால், அது தீர்ப்பு வெளிவந்த 5 நாள்களுக்குள் செய்யப்பட வேண்டும். ஆனால், இந்தத் தீர்ப்பு பெரும்பாலும் மாறாது என்று அந்த நாட்டின் அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இதுவே முதல்முறை
பிரேசிலில், தேர்தலில் சதிவேலை செய்யப்பட்டதாக அதிபராக இருந்த ஒருவருக்கு எதிராக தீர்ப்பு வருவது இதுவே முதல்முறை.

கொதிக்கும் அமெரிக்கா
இவருக்கு எதிரான இந்தத் தீர்ப்பிற்கு கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளது அமெரிக்கா.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தத் தீர்ப்பு, 'மிகவும் மகிழ்ச்சியற்ற ஒன்று' என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மார்க் ரூபியோ, இந்தத் தீர்ப்பை, 'சூனிய வேட்டை' என்ற தெரிவித்துள்ளார்.
தற்போதைய பிரேசில் அதிபர் லூலா ட்ரம்ப் வரிக்கு எதிராக செயல்பட்டு வரும் வேளையில், போல்சனாரோ அமெரிக்க ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.