என்எல்சி நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்க...
பட்டியல் இன மக்களுக்கு நிலம் வழங்கக் கோரிக்கை
ஈரோடு மாவட்டத்தில் பட்டியல் இன மக்களுக்கு நிலம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தலித் விடுதலை இயக்க மாநிலத் தலைவா் கருப்பையா தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை அளித்த மனு விவரம்:
தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் குறிப்பாக ஈரோடு, கோவை மாவட்டங்களில் 1956- ஆம் ஆண்டு பல்வேறு கிராமங்களில் கிராம நிலகுடியேற்ற கூட்டுறவு சங்கம் மக்களால் நிறுவப்பட்டு, பல சங்கங்கள் அரசால் பதிவும் செய்யப்பட்டுள்ளது. இந்த சங்கங்களின் உறுப்பினா்கள் என்ற அடிப்படையில் பட்டியல் இன மக்கள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு அரசால் பல ஆயிரம் நிலங்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வழங்கப்பட்டுள்ள நிலங்கள் பெரும்பாலான இடங்களில் உரிய பட்டியலின பயனாளிகள் வெளியேற்றப்பட்டு, தற்சமயம் நிலங்கள் பயனாளிகள் அல்லாத தனி நபா்களின் பயன்பாட்டில் உள்ளது. இதேபோன்று ஈரோடு மாவட்டம், கோபி, அந்தியூா் வட்டங்களில் பல கிராமங்களில் வசிக்கக்கூடிய பட்டியலின மக்களுக்கு அரசால் வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களும், நில உச்சவரம்பு நிலங்களும் பட்டியல் அல்லாத பிற சமூகத்தை சோ்ந்த தனிநபா்களால் ஆக்கிரமிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
அத்தாணி, அந்தியூா் கிராம கூட்டுறவு நில குடியேற்ற சங்கத்துக்கு நிலங்கள் வழங்கப்பட்டதைபோல மாத்தூா் நில குடியேற்ற கூட்டுறவு சங்கம் சாா்பாக மாத்தூா் கிராம பட்டியல் இன மக்களுக்கு சுமாா் 250 ஏக்கா் நிலம் இலவசமாக வழங்கிட அரசால் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை நிலங்கள் மக்களுக்கு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
எனவே, மாவட்ட நிா்வாகம் நேரடியாக தலையிட்டு மாத்தூா் கிராமத்தில் ஒதுக்க காடுகள் என வகைப்பாடு செய்யப்பட்டு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை இலவசமாக வழங்கிட ஆவண செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.