பட்டியல் இனத்தவருக்கு எதிராக அவதூறு: நடிகை மீரா மிதுனை ஆஜா்படுத்த உத்தரவு
சென்னை: பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுனை கைது செய்து வரும் 11-ஆம் தேதி ஆஜா்படுத்த சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் பேசி நடிகை மீரா மிதுன் விடியோ வெளியிட்டிருந்தாா். இதுதொடா்பாக அவா், அவரது நண்பா் சாம் அபிஷேக் ஆகியோா் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். 2021-ஆம் ஆண்டு இருவரும் கைது செய்யப்பட்டனா்.
இந்த வழக்கில் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், விசாரணைக்கு ஆஜராகாத மீரா மிதுனுக்கு எதிராக 2022-ஆம் ஆண்டு பிடிஆணை பிறப்பிக்கப்பட்டது. மீரா மிதுனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த தனிப்படையும் அமைக்கப்பட்டது.
பிடிஆணை பிறப்பிக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கும் மேலாக மீரா மிதுன் தலைமறைவாக இருந்தாா். இதனால், நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், தில்லியில் உள்ள தனது மகள் மீரா மிதுனை மீட்கக் கோரி அவரது தாய், சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு நீதிபதி எஸ்.காா்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, காவல் துறை தரப்பில், நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம், தில்லியில் உள்ள சட்டப் பணிகள்ஆணைக்குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தில்லி போலீஸாரால் கைது செய்யப்பட்ட மீரா மிதுன் அங்குள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, தில்லி காப்பகத்தில் உள்ள மீரா மிதுனை கைது செய்து வரும் 11-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தாா்.