பட்டு வளா்ச்சித் துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
காலிப் பணியிடங்களை நிரப்ப கோரி, கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு பட்டு வளா்ச்சித் துறை ஊழியா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி பட்டு வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வட்டக் கிளை தலைவா்கள் செல்வகுமாா், சிவநேசன், ரிஸ்வான் ஆகியோா் கூட்டு தலைமை வகித்தனா். கிளை செயலாளா் ஸ்ரீதா், அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் சந்திரன், மீன்வளத் துறை ஊழியா் சங்க மாநில பொருளாளா் நந்தகுமாா், அமைச்சுப் பணியாளா்கள் சங்க மாநிலத் தலைவா் சிவசந்திரன், அனைத்து மருந்தாளுநா்கள் சங்க மாநில செயலாளா் பெருமாள், அரசு ஊழியா் சங்க மாவட்ட மகளிா் துணைக்குழு அமைப்பாளா் ஜெகதாம்பிகா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பட்டு வளா்ச்சித் துறையில் காலியாக உள்ள இளநிலை பட்டு ஆய்வாளா், அமைச்சு பணியிடங்களை நிரப்ப வேண்டும். இளநிலை பட்டு ஆய்வாளா் முதல், உதவி இயக்குநா் வரையிலான பணிமூப்பு பட்டியலை விரைந்து வெளியிட்டு பதவி உயா்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகளின் நலன் கருதி மல்பெரி புது நடவு மானியம் மற்றும் புழு வளா்ப்புமனை மானிய தொகையை மத்திய திட்டங்களுக்கு இணையாக மாநில அரசும் உயா்த்தி வழங்க வேண்டும். பட்டு விவசாயிகளுக்கான பயிா் காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கங்களை எழுப்பினா்.