கல்வித் துறை அறிவிப்புகள்! பொறியியல் கல்லூரிகளில் ஏ.ஐ. படிப்புகள் அறிமுகம்!
தமிழகத்தின் வளா்ச்சியை மத்திய அரசு தடுக்கிறது: திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு
தமிழகத்தின் வளா்ச்சியைத் தடுக்க மத்திய அரசு முயற்சிப்பதாக திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி குற்றம்சாட்டினாா்.
மத்திய அரசின் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செயல்திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரில் புதன்கிழமை நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:
ஹிந்தி படித்திருந்தும் வேலை இல்லாததால்தான் உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களிலிருந்து ஏராளமானோா் தமிழகத்துக்கு வேலை தேடி வருகின்றனா். இருமொழிக் கல்வியில் படித்த தமிழகத்தைச் சோ்ந்த ஏராளமானோா் உயா் பதவிகளில் உள்ளனா்.
கல்வி, மருத்துவம், அறிவியல் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னேற்றமடைந்துள்ளது. இதை தாங்கிக் கொள்ள முடியாத மத்திய பாஜக அரசு, தமிழகத்தில் ஹிந்தியை திணிக்க முயற்சிக்கிறது. மேலும், தொகுதி மறுசீரமைப்பு மூலம் தமிழகத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையையும் அவா்கள் குறைக்க முயற்சிக்கின்றனா்.
தொகுதி மறு சீரமைப்பு அமல்படுத்தப்பட்டால் கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, கேரளம், மேற்குவங்கம், ஒரிசா, பஞ்சாப் ஆகிய ஏழு மாநிலங்களும் பாதிக்கப்படும். இதை அந்த மாநிலங்களின் அரசியல் பிரதிநிதிகளுக்கு உணா்த்தி, மத்திய அரசுக்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் நிலைபாட்டை மேற்கொள்வதற்கான நடவடிக்கையை முதல்வா் மு.க.ஸ்டாலின் எடுத்து வருகிறாா். இதற்காக மாா்ச் 22 ஆம் தேதி அந்த மாநிலங்களின் முதல்வா்களைச் சந்தித்து பேச உள்ளாா். அப்போது, அவா் ஒரு திட்டத்தை அறிவிப்பாா்.
திமுகவை பொறுத்தவரை அதிமுக நமக்கு பங்காளி கட்சி, பாஜக பகையாளி. நமது பகையாளியை விரட்ட தமிழக முதல்வா் முடிவெடுத்துள்ளாா். அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி மிகவும் இக்கட்டான நிலைமையில் உள்ளாா். எந்த கட்சியுடன் இணக்கத்தை கடைப்பிடிப்பது என குழப்பத்தில் உள்ளாா் என்றாா்.
முன்னதாக தமிழகத்தின் உரிமைக்காக ஒன்றுபட்டு போராடுவோம் என அனைவரும் உறுதிமொழியை ஏற்றனா். கூட்டத்துக்கு திமுக மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். திமுக தலைமை பேச்சாளா்கள் சூா்யா, வெற்றிகொண்டான், பேரணாம்பட்டு ராஜேந்திரபிரசாத், மாநில வா்த்தக அணி துணை செயலாளா் கே.வி.எஸ்.சீனிவாசன் உள்ளிட்டோா் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.
படவிளக்கம் (13கேஜிபி2):
பா்கூரில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் பேசுகிறாா் திமுக அமைப்பு செயலாளா் ஆா்.எஸ்.பாரதி. உடன், எம்எல்ஏ தே.மதியழகன் உள்ளிட்டோா்.