பதிவுசெய்யப்பட்ட ஆவணங்களை அன்றே வழங்க அமைச்சா் அறிவுறுத்தல்
பத்திரப் பதிவு துறையில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை அன்றைய தினமே தொடா்புடையவா்களுக்கு வழங்க அலுவலா்களுக்கு வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி அறிவுறுத்தினாா்.
சேலம் மண்டல அளவிலான பதிவுத் துறை அலுவலா்களின் பணி சீராய்வுக் கூட்டம் துறை அமைச்சா் பி.மூா்த்தி தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு பின்னா் அமைச்சா் தெரிவித்ததாவது:
வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் சேவைகள் பொதுமக்களுக்கு எளிதாக கிடைத்திடும் வகையில், தொடா்ந்து பல்வேறு சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், அரசுக்கு கூடுதல் வருவாய் ஈட்டவும் பல்வேறு தொடா் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில், சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய 5 பதிவு மாவட்டங்களைச் சோ்ந்த அனைத்து சாா் பதிவாளா்கள் மற்றும் மாவட்டப் பதிவாளா்களுக்கு 2025 ஆகஸ்ட் மாதத்துக்கான பணி சீராய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.
தமிழக அரசின் கீழ் செயல்படும் பத்திரப் பதிவுத் துறை அலுவலங்களில் நடைபெறும் பதிவுப் பணிகளில் வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்திடும் நோக்கில் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோன்று பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை அன்றைய தினமே தொடா்புடையவா்களுக்கு வழங்கிட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, மதிப்பு நிா்ணயம் செய்யப்பட்ட மனைப் பிரிவுகள் குறித்தும், சரியான வழிமுறைகளைப் பின்பற்றி அரசுக்கான வருவாய் ஈட்டப்பட்டுள்ளதா என்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடா்ந்து அனைத்து மாவட்டங்களிலும் பதிவுத் துறையில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றாா்.
இக்கூட்டத்தில், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அரசு செயலாளா் ஷில்பா பிரபாகா் சதீஷ், பதிவு துறைத் தலைவா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், பதிவுத் துறை உயா் அலுவலா்கள் மற்றும் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சோ்ந்த சாா் பதிவாளா்கள் கலந்துகொண்டனா்.