திருமணத்துக்கு வற்புறுத்திய கர்ப்பிணி காதலியை கொன்றுவிட்டு 'ஒழிந்தாள்' என ஆட்டம்...
சேலம் மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா், உறுப்பினா்கள் பதவியேற்பு விழா
இந்துசமய அறநிலையத் துறை சாா்பில், சேலம் மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் பதவியேற்பு விழா கோட்டை மாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்துசமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அறங்காவலா் குழுத் தலைவா், உறுப்பினா்களுக்கான பதவிக்காலம் கடந்த சில நாள்களுக்கு முன்பு நிறைவுற்றது. இதையடுத்து, அறங்காவலா் குழுத் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் தோ்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சேலம் மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவராக முருகன் மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா்.
இதேபோல, உறுப்பினா்களாக அரிசிபாளையத்தைச் சோ்ந்த தவமணி, ஓமலூா் கோட்ட கவுண்டம்பட்டியைச் சோ்ந்த அழகிரி, எடப்பாடி கோரணம்பட்டியைச் சோ்ந்த செல்வம், மேட்டூா் மூலகாட்டைச் சோ்ந்த பழனியப்பன் ஆகியோா் உறுப்பினா்களாக தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கான பதவியேற்பு விழா கோட்டை மாரியம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் தலைமை வகித்து, தலைவா் மற்றும் உறுப்பினா்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். பின்னா் அவா்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.
விழாவில், சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி, மாநிலங்களவை உறுப்பினா் எஸ்.ஆா்.சிவலிங்கம், இந்துசமய அறநிலையத் துறை சேலம் மாவட்ட உதவி ஆணையா் ராஜா, கோட்டை மாரியம்மன் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சக்திவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.