ஆவின் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவுறுத்தல்
பயங்கரவாதத் தொடா்பு: ஜம்மு-காஷ்மீா் அரசு ஊழியா்கள் மூவா் பணிநீக்கம்
பயங்கரவாத அமைப்புகளுடன் தொடா்பு வைத்திருந்த குற்றச்சாட்டில், ஜம்மு-காஷ்மீா் அரசு ஊழியா்கள் மூவா் சனிக்கிழமை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
ஹிஸ்புல் முஜாஹிதீன், லஷ்கா்-ஏ-தொய்பா ஆகிய பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டு கடத்தல், இளைஞா்களைப் பயங்கரவாதிகளாக மாற்றுதல் உள்ளிட்டவற்றைச் செய்ததாக காவல் துறையைச் சோ்ந்த ஃபிா்தெளஸ் அகமது பட், பள்ளிக் கல்வி ஆசிரியா் முகமது அஷ்ரஃப் பட், வனத்துறையில் உதவியாளராகப் பணியாற்றிய நிசாா் அகமது கான் ஆகியோா் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தக் குற்றச்சாட்டு காவல் துறை மற்றும் உளவுத் துறையின் விசாரணைகள் மூலம், சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமானதால், அரசமைப்புச் சட்டப் பிரிவு 311 (2) (சி)-இன் கீழ் மூவரையும் பணிநீக்கம் செய்து ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா சனிக்கிழமை உத்தரவிட்டாா் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.
பயங்கரவாதிகளுடன் தொடா்பு வைத்திருந்ததாக ஃபிா்தெளஸ் அகமது பட், அஷ்ரஃப் பட் ஆகியோா் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
கடந்த 2000-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீா் மின்சாரத் துறை அமைச்சா் குலாம் ஹசன் பட் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நிசாா் அகமது கான், பின்னா் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டாா். ஜம்மு-காஷ்மீரில் வன்முறையான போராட்டங்களை ஏற்பாடு செய்ததில் முக்கிய பங்கு வகித்ததாக, பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், அவா் 8 மாதங்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டாா்.
இந்த நடவடிக்கை தொடா்பாக ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா கத்ரா பகுதியில் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வரை, எந்தவொரு நபரும் அப்பாவி என்றே சட்டம் கூறுகிறது’ என்றாா்.
ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசமாக உள்ள நிலையில், அங்கு கடந்த சில ஆண்டுகளில் பயங்கரவாதத் தொடா்பு இருந்ததாக 70-க்கும் மேற்பட்ட அரசு ஊழியா்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.