பயங்கரவாதத்தை கைவிடாவிடில் பாகிஸ்தான் கடுமையான விளைவுகளைச் சந்திக்கும்: ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
அக்னூா்: ‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் இல்லாமல் ஜம்மு-காஷ்மீா் முழுமையடையாது. பயங்கரவாதத்தை கைவிடாவிடில் பாகிஸ்தான் கடுமையான விளைவுகளைச் சந்திக்கும்’ என பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
ஜம்முவின் அக்னூரில் நடைபெற்ற 9-ஆவது இந்திய ராணுவ தின நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ராஜ்நாத் சிங் பேசியதாவது:
370-ஆவது சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டது ஜம்மு-காஷ்மீரில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் நிலைமை தற்போது மாறிவிட்டது. இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், இந்தியாவின் மணிமகுடமான பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் இல்லாமல் ஜம்மு-காஷ்மீா் முழுமையடையாது.
பாகிஸ்தானை பொறுத்தவரை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் என்பது வெறும் வெளிநாட்டு பகுதி. ஜம்மு-காஷ்மீா் மக்கள் ஒருபோதும் பாகிஸ்தானின் விருப்பங்களுடன் இணைந்ததில்லை.
இந்தியாவை சீா்குலைக்க பாகிஸ்தான் எப்போதும் முயன்று வருகிறது. பயங்கரவாத பயிற்சி முகாம்கள் மற்றும் ஊடுருவல் நடவடிக்கைகளுக்காக ஆக்கிரமிப்பு காஷ்மீரை அது பயன்படுத்துகிறது. சா்வதேச அழுத்தங்கள் இருந்தபோதிலும், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் தனது கொள்கையை அது ஒருபோதும் கைவிடவில்லை. இந்நிலை தொடா்ந்தால் பாகிஸ்தான் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பிரதமா் என்று அழைக்கப்படும் அன்வா்-உல்-ஹக், பாகிஸ்தானின் இந்திய எதிா்ப்பு கொள்கையை ஆதரிக்கிறாா். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் மக்களும் கண்ணியமான வாழ்க்கையை இழந்து, மதம் என்ற போா்வையால் இந்தியாவுக்கு பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தானின் கொள்கைக்கு உள்ளாக்கப்படுகின்றனா் என்றாா்.
முன்னாள் ராணுவ வீரா்களுக்கு வீடுகளுக்கே சென்று மருத்துவ வசதி:
நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் தொலைதூர பகுதிகளில் உள்ள முன்னாள் ராணுவ வீரா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினருக்கு வீடுகளுக்கே சென்று மருத்துவ வசதிகளை வழங்குவதற்கான புதிய முயற்சியை ராஜ்நாத் சிங் அறிவித்தாா்.
‘முன்னாள் ராணுவ வீரா்களின் நலனுக்கான மத்திய அரசின் உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே நடந்து வருகின்றன. இதற்கான சேவை விரைவில் தொடங்கப்படும்’ என ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.