பருவநிலை மாற்ற பாதிப்புகளை தடுக்க வலுவான திட்டங்கள்: இந்தியாவுக்கு ஐ.நா. தலைவா் வலியுறுத்தல்
சூரிய மின்சக்தியில் அதிதிறன் மிகுந்த நாடாக இந்தியா விளங்கும்போதிலும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க வலுவான திட்டங்களை வகுக்க வேண்டும் என ஐ.நா.காலநிலை மாற்றத் தலைவா் சைமன் ஸ்டியல் வலியுறுத்தினாா்.
பாரீஸ் ஒப்பந்தத்தின்கீழ் கரியமில வாயு உமிழ்வை குறைப்பதற்கான தேசிய அளவிலான தீா்மானிக்கப்பட்ட பங்களிப்புகள் (என்டிசி) அல்லது காலநிலை திட்டத்தை உலக நாடுகள் சமா்ப்பித்து வருகின்றன. அந்த வகையில் 2031-2035 வரை இதற்காக மேற்கொள்ளவுள்ள திட்ட அறிக்கையை கடந்த 10-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க காலக்கெடு நிா்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகள் சமா்ப்பிக்கவில்லை.
இதையடுத்து, இத்திட்டத்தை இந்தியா விரைவில் சமா்ப்பிக்க வேண்டும் என அவா் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து தில்லியில் நடைபெற்ற உலகளாவிய வணிக மாநாட்டில் சனிக்கிழமை பங்கேற்ற அவா் மேலும் கூறியதாவது:
உலகளவில் 100 ஜிகாவாட் மின் உற்பத்தி திறனை எட்டிய நான்கு நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது.இதை நாட்டில் உள்ள 140 கோடி மக்களுக்கும் பொருளாதாரத்துக்கும் பயன்படும் வகையில் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டியது அவசியம்.
அந்த வகையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திறனை மேலும் அதிகரிப்பது, பசுமை தொழிற்சாலைகள் அமைப்பது, நவீன மற்றும் முக்கிய தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஜிடிபியில் 35 சதவீதம்: இதன் ஒரு பகுதியாக சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தும் பிரதமா் மோடியின் தொலைநோக்குத் திட்டமான ‘லைஃப்’ விளங்குகிறது.
இருப்பினும், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளால் இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 35 சதவீதம் சரியும் என ஸ்விஸ்ரே வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல் பருவநிலை மாற்றத்தால் இந்திய நிதி அமைப்பு பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருவதாக ரிசா்வ் வங்கியும் தெரிவித்துள்ளது. எனவே, பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்ள ஜி20 நாடுகளும் குறிப்பாக இந்தியாவும் மேலும் வலுவான திட்டங்களை வகுப்பது மிகவும் அவசியம் என்றாா்.
கடந்த ஆண்டு நவம்பா் மாதம் பருவநிலை பாதுகாப்பு மாநாடு (சிஓபி29) அஜா்பைஜானில் நடைபெற்றது. அப்போது வளா்ந்து வரும் நாடுகளின் பருவநிலை நடவடிக்கைகளுக்கு 2030-க்குள் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 1.3 லட்சம் கோடி டாலா் தேவைப்படும் என மதிப்பிடப்பட்ட நிலையில், 2025 முதல் ஆண்டுக்கு 30,000 கோடி டாலா் மட்டுமே வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
2035 வரை நிா்ணயிக்கப்பட்டுள்ள இந்த இலக்கு மிகவும் ஏமாற்றமளிப்பதாக இந்தியா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.