தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: "திமுக-வின் தீய நோக்கம்" - உயர் நீதிமன்ற தீர்ப்ப...
பல கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணையும்: இபிஎஸ்
திருப்பத்தூர்: மேலும் பல கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணையும் என முன்னாள் முதல்- அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.
திருப்பத்தூரில் உள்ள தனியார் உணவகத்தில் புதன்கிழமை முன்னாள் முதல்- அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருப்பத்தூர் மாவட்டத்தில் எழுச்சி பயணம் மேற்கொள்ள உள்ளேன். விவசாயம், பள்ளிக் கல்வி, தனியார் பேருந்துகள் உள்ளிட்ட 32 அமைப்புகளை சேர்ந்தவர்கள், அவர்களின் குறைகள் தொடர்பாக கோரிக்கைகளை தெரிவித்தனர்.
அ.தி.மு.க. அரசு அமைந்த பிறகு அவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். அ.தி.மு.க. அரசு காலத்தில் ஏரிகள் தூர்வாரப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்பட்டு, மதகுகள் சரிசெய்து, மழைநீர் சேமிக்கப்பட்டு, அந்தந்த பகுதியில் விவசாயம் செழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மாணவர் சேர்க்கை குறைந்ததால் அரசு பள்ளிகள் பூட்டியது தி.மு.க. அரசின் சாதனை. அதனை பூட்டுவதற்கு பதிலாக தொடர்ந்து பள்ளி நடத்த, தி.மு.க. அரசு நடவடிக்கை எடுத்து இருந்தால் பாராட்டி இருக்கலாம்.
ஏற்கனவே இயங்கி வந்த பள்ளிகளை பூட்டியது சரியல்ல. ஏழை, எளிய மாணவ- மாணவிகள் கல்வி கற்பதற்காகத்தான் அரசு பள்ளிகள் நடைபெறுகின்றன. இதில் சரியான கவனம் செலுத்தாத காரணத்தினால் சுமார் 207 பள்ளிகள் மூடப்பட்டது வருத்தமளிக்கிறது. தி.மு.க. அரசு பதவியேற்ற பிறகு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது.
பத்திரிகைகளில் தங்கம், வெள்ளி விலை நிலவரம் மட்டுமே வெளியே வந்துகொண்டு இருந்தது. தற்போது கொலை நிலவரம் குறித்து பத்திரிகைகளில் வெளிவருகிறது. இந்த மோசமான நிலைக்கு காரணம், காவல் துறையை சுதந்திரமாக செயல்பட அரசு அனுமதிக்காததுதான். போதைப்பொருள் விற்பனை அதிகரித்ததால்தான் கொலை, கொள்ளைகள் அதிகரித்து வருகின்றது.
தமிழக அரசு சுமார் 50 திட்டங்களை அறிமுகப்படுத்தி, அதற்கு தனிக்குழுக்களை அமைத்து, தற்போது அனைத்துக் குழுக்களும் செயல்படாமல் உள்ளது. திட்டங்கள் நடைமுறைபடுத்தி அதில் வெற்றியடைந்தால் மட்டுமே மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
கட்சியின் விதிகளை மீறுபவர்கள் கட்சியில் இருந்து அகற்றுவதும், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி இணைப்பதும், தமிழக அரசியல் வரலாற்றில் புதிதல்ல. அரசியல் கூட்டணிகள் குறித்து தேர்தல் நேரத்தில் மட்டுமே பதில் அளிக்க முடியும். கூட்டணியை முடிவு செய்ய 8 மாத காலம் உள்ளது. மேலும் பல கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணையும் என்றார்.
அப்போது திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி, தம்பிதுரை எம்.பி. ஆகியோர் உடன் இருந்தனர்.
இதையும் படிக்க: ஆளுநரின் தேநீர் விருந்து: காங்கிரஸைத் தொடர்ந்து விசிகவும் புறக்கணிப்பு!